திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்திருக்கிறது விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயில், இங்கு 16 அடி உயரத்தில் அஞ்சலி ஹஸ்த்ராக பிரமாண்டமாகக் காட்சியருள்கிறார் அனுமன். இந்த அனுமனின் சிறப்புகள் குறித்து கோயில் பட்டர் சுந்தரராஜ பட்டாசார்யரிடம் கேட்டோம்.

விஸ்வரூப ஆஞ்சநேயர் 16 செல்வத்தையும் கொடுக்கக் கூடியவர் என்பதால் 16 அடி உயரத்தில் இங்கே காட்சி கொடுக்கிறார். ராமாயணத்தில் சஞ்சீவி மலையெனும் மூலிகை மலையை எடுத்துச் சென்றபோது சிறு கணம் அனுமன் பாதம் பதித்த இடமாக இந்தப் பகுதி கூறப்படுகிறது. சஞ்சீவி மலையின் சிறுபகுதி விழுந்து உருவான மலைதான் அருகில் இருக்கும் சிறுமலை என்கிறார்கள் மக்கள். இந்தப் பகுதியில் வீசும் மூலிகைக் காற்று மேனியில் பட்டால் சர்வ பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இங்கு ஆஞ்சநேயர் கிழக்கு முகமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரின் கண்கள் மிகவும் சக்தி நிறைந்ததாக இருக்கின்றன. அவர் பார்வை பட்டாலே நம் பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம். புகழ்பெற்ற 6 அனுமன் ஸ்தலங்களான நாமக்கல், சுசீந்திரம், சின்னாளப்பட்டி, நங்கநல்லூர், தூத்துக்குடி, இலங்கை அனுமன் ஆலயங்களில் 3வது ஸ்தலமாக சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் உள்ளார்.

மேலும் வாயு மூலையில் அமைந்த ஒரே ஆலயம் இதுதான். பிற இடங்களில் வால் கிரீடத்தை நோக்கி இருக்கும் ஆனால் இங்கு பாதத்தை நோக்கி சுருட்டி வைக்கப்பட்டிருகிறது. நீதிகளை வழங்கக்கூடிய கதாம்சம் கொண்டவர். சுக்ரீவரின் அம்சமாக உடைவாள் இடுப்பில் சொருகியிருக்கிறார்.
இந்த அனுமனின் மற்றுமொரு விசேஷம், இவரின் திருவடிக்குக் கீழே சனி பகவான் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவடியில் கேது, ராகு காட்சி அளிக்கின்றனர். எனவே இங்கு வந்து ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் சனிதோஷம் தீர்வதோடு, ராகு – கேது தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த அனுமனுக்கு வடை மாலை, தயிர் சாதம் நிவேதனம் செய்து அன்னதானம் கொடுத்து வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். சாமிக்கு வெண்ணெய்க் காப்பு சாத்துவது முக்கிய பிரார்த்தனையாக இருக்கிறது.

கல்யாணம், குழந்தை பாக்கியம், உத்தியோகம், உயர்பதவி, படிப்பு, தொழில் மேம்படுதல் ஆகிய வேண்டுதல்களோடு வருபவர்கள் வெண்ணெய்க் காப்பு சாற்றி வழிபடுகின்றனர். அதேபோன்று பச்சைக் காப்பு, செந்தூரக் காப்பு, தங்கக் காப்பு, 16 வகையான அபிஷேகம், 108, 508, 1008 என்னும் எண்ணிக்கையில் வடை மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பு.

இங்கு ஶ்ரீராமர் மாருதி ராஜனாக அருள்பாளிக்கிறார். இங்குள்ள விமானம் சுந்தரகாண்ட விமானம் என்று போற்றப்படுகிறது. அந்த விமானத்தில் எழில்மிகு 68 சிற்பங்கள் காணப்படுகின்றன. புரட்டாசி சனிக்கிழமைகள் இங்கு மிகவும் விசேஷம். அந்த நாள்களில் திருப்பதிப் பெருமாளாக, பஞ்சமுக ஆஞ்சநேயராக, யோக ஆஞ்சநேயராக, பால ஆஞ்சநேயராக, கல்யாண ரூபி எனப் பல ரூபங்களில் காட்சியளிப்பார் அனுமன்.
ராமாயணத்தில் இந்தத் தலம் குறித்த செய்தி காணப்படுகிறது என்றும் ஆதியில் திருவடி மட்டுமிருந்த இவ்விடத்தில் கனகராஜ் என்ற பக்தருக்குக் காட்சியளித்து சுவாமி எழுந்தருளினார் என்றும் சொல்கிறார்கள். எனவே இந்த ஆலயம் மிகப் பழைமைவாய்ந்தது என்கிறார்கள்.

சித்திரை மாதம் பத்தாயிரத்து எட்டு பழக்காப்பு, தை மாதம் பத்தாயிரத்து எட்டு கரும்பு சாத்துதல், மார்கழி மாதம் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் என்று இந்த அனுமன் ஆலயத்தில் நடக்கும் பூஜைகள் கண்கொளாக் காட்சியாகும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த அனுமனின் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கி அருள்பெறலாம்.