செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (46). இவர், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க நகரச் செயலாளராக இருந்தார். மேலும், இவர் செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடையை மூடிவிட்டு நேற்றிரவு வீட்டுக்குப் புறப்பட்டார் நாகராஜ். அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல், நாகராஜைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து நாகராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், கொலையாளிகளைத் தேடிவருகிறார்கள்.

நாகராஜ் கொலைசெய்யப்பட்டதையடுத்து அவரின் உறவினர்கள் மற்றும் பா.ம.க-வினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் போலீஸார், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர். அப்போது நாகராஜைக் கொலை செய்துவிட்டு புலிபாக்கம் ரயில்வே பாதை வழியாக ஒருவன் தப்பிச் செல்லும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, அந்த நபரை வழிமறித்தனர்.
அப்போது அந்த நபர் தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து போலீஸார்மீது வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா, துப்பாக்கியால் அந்த நபரின் காலில் சுட்டார். இதில் இடது காலில் குண்டு பாய்ந்து அந்த நபர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் அஜய் என்றும், செங்கல்பட்டு சின்னநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. பா.ம.க பிரமுகர் நாகராஜைக் கொலைசெய்த கும்பலில் ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.