புதுச்சேரிக்கு கடந்த 7-ம் தேதி வருகை தந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். லாஸ்பேட்டையில் நடந்த அந்த விழாவில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் பங்கேற்றனர். இந்த நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 1.42 லட்சம் பேருக்கு ரூ.2,628 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த விழா குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா, “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமது தோல்வி பயத்தை மறைக்க, ஒன்றிய பா.ஜ.க அரசு பல்வேறு மாநிலங்களில் பலவிதமான அரசியல் சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ.க போட்டியிடும் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி, தனது கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர் முதல்வர் ரங்கசாமிக்கும் செக் வைத்திருக்கிறது பா.ஜ.க. ஒன்றிய நிதியமைச்சர் புதுச்சேரிக்கு வருகிறார் என்றதும், மாநிலத்தின் நிதி பிரச்னை குறித்து ஆய்வு செய்வதுடன் அதற்கு தீர்வும் காண்பார் என்று மக்களைப் போல நாங்களும் ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் வந்தவுடன் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அனைவரையும் கும்பலாக உட்கார வைத்து குழு புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டுச் சென்றுவிட்டார், அத்துடன் நிதி பிரச்னை தொடர்பாக எந்த அறிவிப்பையும் செய்யாமல் சென்றதும் புதுச்சேரி மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது புதுச்சேரிக்கு வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் சொல்லிவிட்டுச் சென்ற இந்த இரண்டு ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க முடியாமல் போனது, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முடியாமல் போனது, உயிர்காக்கும் மருந்துகள் வாங்க முடியாமல் போனது, எம்.ஆர்.ஐ போன்ற முக்கிய மருத்துவ உபகரணங்கள் வாங்காமல் போனது போன்றவை ஏழை மக்களை அவதியடையச் செய்திருக்கின்றன. புதுச்சேரிக்கான நிதியை முழுமையாக தராமல் புறக்கணித்தது, கஞ்சா, ரெஸ்டோ பார்கள் மூலம் ஏற்பட்ட கலாசார சீரழிவு, நாட்டு வெடிகுண்டு மூலம் அரங்கேற்றப்படும் கொலைகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் நில அபகரிப்பு போன்ற சம்பவங்கள் மூலம் புதுச்சேரி இன்று ஒர்ஸ்ட் புதுச்சேரியாக மாறியிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் போன்றோர் மீண்டும் மீண்டும் புதுச்சேரிக்கு படையெடுத்து, நலத்திட்டம் என்ற போர்வையில் அரசு பணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தை தொடங்கிவிட்டுச் சென்றுள்ளனர். மாணவர்கள் கல்விக்கடன் கேட்டால் மறுக்கும் வங்கிகள், புதுச்சேரியில் நேற்று நடந்த கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் மூலம் ஆயிரமாயிரம் கோடிகளை கடனாக கொட்டிக் கொடுத்திருப்பது எப்படி ? மாநில வங்கியாளர் குழுமமும், இந்தியன் வங்கியும் இணைந்து 1.41 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,628 கோடி வழங்கியிருக்கின்றன. புதுச்சேரியில் 30 தொகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் தொழில் துவங்க, வீடு கட்ட, மின்வசதி, விவசாயம், முத்ரா உள்ளிட்ட 21 திட்டங்களுக்கு 100 பேரில் 98 பேருக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
10 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில், 1,41,000 பயனாளிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றால், தொகுதிக்கு எவ்வளவு பயனாளிகளுக்கு எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது என்பதை அரசு விளக்க வேண்டும். ஒன்றிய நிதியமைச்சர் வந்தார் என்பதற்காக ஏதோ ஒரு மாயாஜாலத்தை காட்டக்கூடாது. மாநில அந்தஸ்து தேவை என அடிக்கடி தனது குமுறலை வெளிப்படுத்தியவர் முதல்வர் ரங்கசாமிதான். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 14–வது முறையாக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீர்மானம் இன்னும் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் மாளிகையில் தூங்குகிறது. அதற்கு என்ன அர்த்தம்?
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி அவாஸ் யோஜனா வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தில் 30.06.2023 வரை 16,100 பயனாளிகள் வீடு கட்டியுள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அவருக்கு புதுச்சேரி அரசு தெரிவிக்காதது ஏன்? 2021 டிசம்பர் முதல் இதுநாள் வரை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்து கடகால் போட்டு காத்திருக்கும் சுமார் 5,000 பேருக்கு கடன் வழங்காததை புதுச்சேரி அரசு மறைத்திருக்கிறது. அதேபோல பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தில் புதுச்சேரி 156 விழுக்காட்டை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் அவர்கள், முதல்வர் அறிவித்த கேஸ் மானியம் ரூ. 300 பற்றி வாய் திறக்காதது ஏன்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.