சென்னை மடிப்பாக்கம், ராம் நகர் வடக்குப் பகுதியில் வசித்துவருபவர் கந்தசாமி. இவர் குடும்பத்தினருடன் 29.6.2023-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றார். பின்னர் 1.7.2023-ம் தேதி வீடு திரும்பிய கந்தசாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள், அரைக் கிலோ வெள்ளிப் பொருள்கள், 3 கைக்கடிகாரங்கள், ஒரு லேப்டாப், 1,75,000 ரூபாய், பைக் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதையடுத்து கந்தசாமி, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற கொசுறு சூர்யா (23) என்பவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சூர்யாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கந்தசாமி வீட்டில் திருடியது தெரியவந்தது. மேலும் சூர்யாவிடமிருந்து 14 பவுன் தங்க நகைகள், 191 கிராம் வெள்ளிப் பொருள்கள், 3 கைக்கடிகாரங்கள், 1,10,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் சூர்யாவை போலீஸார் கைதுசெய்தனர்.
இவர்மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், பூந்தமல்லி, மாங்காடு, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட சூர்யா அளித்த தகவலின்படி இந்தத் திருட்டுச் சம்பவத்தில் மனோஜ்குமார் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் தேடிவருகிறார்கள். கைதுசெய்யப்பட்ட கொசுறு சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து மடிப்பாக்கம் போலீஸார், “திருட்டு போன வீட்டின் உரிமையாளர் கந்தசாமி, வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருந்தார். அவரின் மனைவி தேவி, விருதுநகருக்குச் சென்றிருந்தார். அதனால் வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட பிரபல திருடன் சூர்யா, அவனின் கூட்டாளியான மனோஜ்குமார் ஆகியோர் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி உள்ளிட்டவற்றைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல் மூலம் சூர்யாவைக் கைதுசெய்துவிட்டோம்” என்றனர்.