சென்னை: மாதவன் நடித்த மின்னலே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன்.
காதல், ஆக்ஷன் ஜானரில் படங்களை இயக்கி பிரபலமான கெளதம் மேனன் தற்போது நடிப்பில் பிஸியாகிவிட்டார்.
இவரது இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம்.
இப்படத்தில் ஏஆர் ரஹ்மானுக்குப் பதிலாக இளையராஜா இசையமைத்ததால் கெளதம் மேனனுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இளையராஜாவால் வந்த பஞ்சாயத்து:ராஜீவ் மேனனிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்து இயக்குநர் ஆனவர் கெளதம் மேனன். மாதவன், அப்பாஸ் நடிப்பில் வெளியான மின்னலே கெளதமின் முதல் படமாக அமைந்தது. அடுத்தடுத்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை இயக்கினார்.
மின்சார கனவு படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்தபோது ஏஆர் ரஹ்மானின் தீவிர ரசிகராகிவிட்டாராம் கெளதம். அதனால் மின்னலே படத்திற்காக முதலில் ஏஆர் ரஹ்மானிடம் தான் சென்றுள்ளார். ஆனால், அவரால் அப்போது முடியாமல் போனதால் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் ஆனார். ஆனாலும், ஏஆர் ரஹ்மானுடன் பணிபுரிய வேண்டும் என்பதே கெளதம் மேனனின் நீண்டநாள் கனவாக இருந்தது. அதனை அவரும் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இறுதியாக ஏஆர் ரஹ்மான் – கெளதம் கூட்டணி விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இணைந்தது. அதனைத் தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளராக கமிட்டானார். நீதானே என் பொன்வசந்தம் போஸ்டர் முதலில் ஏஆர் ரஹ்மான் பெயருடன் தான் வெளியானது. திடீரென அவரால் முடியாமல் போக, அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் கமிட்டானார். ஆனால், இறுதியாக இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.

நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு இளையராஜா 30க்கும் மேற்பட்ட ட்யூன்கள் கொடுத்து கெளதம் மேனனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதிலிருந்தே படத்துக்குத் தேவையான ட்யூன்களை செலக்ட் செய்துள்ளார் கெளதம். ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கெளதம் மேனன் தங்களை ஏமாற்றிவிட்டதாக கடும் கோபத்தில் இருந்துள்ளனர். அதாவது ஏஆர் ரஹ்மான் தான் இசை எனக் கூறிவிட்டு இளையராஜாவை கமிட் செய்துவிட்டார் என சொல்லப்பட்டது.
இதனால், நீதானே பொன் வசந்தம் படத்தின் ஆடியோ ரைட்ஸ் பிஸினஸ் குறைந்துவிட்டதாக பிரச்சினை செய்துள்ளனர். இதனால் ஒருகட்டத்தில் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் வெளியாவதில் கூட சிக்கல்கள் இருந்துள்ளது. அதனால் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்களை அவசரமாக வெளியிட்டுள்ளார் கெளதம். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடிக்க, தனது இசையால் பதிலடி கொடுத்துள்ளார் இளையராஜா.