கொழும்பு-‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, இலங்கைக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்யும்’ என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
இந்த பிரச்னையில் இருந்து மீள்வதற்காக, முதல் நாடாக இந்தியா உதவிகளை அளிக்க முன்வந்தது. இதன்படி, 33,000 கோடி ரூபாய் அளவுக்கு இலங்கைக்கு கடன் உதவிகள் அளிக்கப்பட்டன.
பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இதற்கு இலங்கைக்கு, இந்தியா உட்பட, 17 நாடுகள் உதவுவதாக அறிவித்து உள்ளன.
இந்நிலையில், இலங்கையில் நேற்று நடந்த கட்டுமானம், மின்சார கண்காட்சியை துவக்கி வைத்து, இலங்கைக்கான இந்திய துணைத் துாதர் வினோத் ஜேக்கப் பேசியதாவது:
இந்தியா – இலங்கை இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் சிறப்பான பாதையில் செல்கிறது.
அண்டை நாடுகளுடன் நல்லுறவு என்ற அடிப்படையில் பொருளாதார சிக்கலில் சிக்கிய இலங்கைக்கு, முதல் நாடாக இந்தியா உதவிகளை அறிவித்தது.
இந்த பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீள்வதற்கு, தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா வருகிறார் விக்ரமசிங்கே
இலங்கையில் கடந்தாண்டு பொருளாதார சிக்கலுடன், அரசியல் குழப்பமும் ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். கடந்தாண்டு ஜூலையில் நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.அதிபராக அவர் பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு, இரண்டு நாள் பயணமாக வரும் 21ம் தேதி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்