சென்னை: நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் லியோ.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.
சில பேட்ச் வேலைகளுக்காக படக்குழுவினர் தற்போது காஷ்மீரில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்த சூட்டிங்கும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தில் விஜய் போர்ஷன்கள் நிறைவடைந்ததாக லோகேஷ் அறிவிப்பு: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் லியோ. முன்னதாக மாஸ்டர் படத்தில் இருவரும் இணைந்திருந்த நிலையில், அந்தப் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. இந்நிலையில் மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே மேலும் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. மாஸ்டர் போல இந்தப் படம் இருக்காது என்றும் 100 சதவிகிதம் லோகேஷ் படமாக இருக்கும் என்று முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பதற்கு பல காரணங்கள் படத்தில் காணப்படுகின்றன. 14 வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளனர். படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், அனுராக் காஷ்யப் என அதிகமான இயக்குநர்கள் இருப்பதும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டும என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் கேங்ஸ்டராக நடிகர் விஜய் நடித்துள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் கடந்த பிப்ரவரியில் துவங்கப்பட்டது. கடுமையான குளிர், நிலநடுக்கம் போன்றவற்றிற்கு இடையில் தொடர்ந்து 52 நாட்கள் சூட்டிங் நடைபெற்ற நிலையில், சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடந்தது. இந்நிலையில், தற்போது சில பேட்ச் வேலைகளுக்காக மீண்டும் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப்பின் போர்ஷன்கள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் இற்தப் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவது படத்தையும் சிறப்பாக்கிய விஜய்க்கு இந்தப் பதிவின்மூலம் அவர் நன்றி தெரிவித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து வேலை வாங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவரது முந்தையப் படமும் இதேபோல ஏராளமான நட்சத்திரங்களுடன் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. சிறிய கேரக்டராக இருந்தாலும், அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதே பாணியை லியோ படத்திலும் அவர் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.