US decides to supply banned cluster bombs to Ukraine | தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்-பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள, ‘கிளஸ்டர் பாம்’ எனப்படும் கொத்து குண்டு களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 500வது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தியது.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. இதனால் ரஷ்ய படை உக்ரைன் ராணுவத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

எனினும் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனுக்கு ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் அமைப்பு, ராக்கெட் போன்ற ஆயுதங்களை அமெரிக்கா வழங்கிஉள்ளது.

இதற்கிடையே, கொத்து குண்டுகளை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இதையடுத்து, மிக ஆபத்தான கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கொத்து குண்டுகள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

அவற்றை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த வகை குண்டுகள் பொதுமக்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்தும். ஏராளமான சிறு குண்டுகளை இந்த கொத்து குண்டுகள் உமிழும். மிக அதிகமான பரப்பளவுள்ள பகுதிகளை இந்த குண்டுகளால் தாக்கி அழிக்க முடியும். இதனால், இந்த குண்டுகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

latest tamil news

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியதாவது:

கொத்து குண்டுகளின் ஆபத்து காரணமாகவே உக்ரைனுக்கு அவற்றை அளிப்பது தாமதப்படுத்தப்பட்டது. ஆனால், உக்ரைனில் ஆயுத பற்றாக்குறை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

உக்ரைனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள், ரஷ்யாவால் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைவிட மிகவும் பாதுகாப்பானவை.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.