அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுடன் நிறைவடைந்த போதிலும், நியாயமான காரணம் இருப்பின் எவரும் ஜனாதிபதி அலுவலகத்தில் முறையிட முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரி உதவிகள் தொடர்பான மேன்முறையீடு செய்யும் திகதி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று வரை சுமார் 9,68,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 17,500 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளன. விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர்களால் முறையாக ஆராயப்படுகின்றன. இந்த மேன்முறையீடுகளை சமர்ப்பித்தவர்களில் ஆறு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே உதவிகள் கிடைக்கின்றவர்களாக இருக்கின்றனர். அதை விட அதிகமான உதவிகளை எதிர்பார்த்தே அவர்கள் மேன்முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு எவ்வாறான பிரச்சினைகள் இருந்தாலும் பணம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், நியாயமான காரணங்கள் இருப்பின், கோரிக்கைகளை முன்வைக்கலாம். விண்ணப்பங்களை அவர்களது பிரதேசத்தின் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க முடியும்.
எனவே அஸ்வெசும தொடர்பில் அரசியல் கோஷங்களை எழுப்ப வேண்டியதில்லை. 17,500 ஆட்சேபனைகள் மட்டுமே கிடைத்துள்ளன. இது நேர்மையுடன் தொடங்கப்பட்ட திட்டம். அடுத்த மாதத்திற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.