டாஸ்மாக் கடைகளை 7 மணிக்கு திறந்தால் புரட்சி வெடிக்கும் – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

மதுரை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுதிய, ‘குடியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்ப்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது. அப்புத்தகத்தை அவரே நேற்று வெளியிட விழாவில் அக்கட்சி மாநகர வழக்கறிஞர் பிரிவு செயலர் தாமோதரன், புறநகர் மாவட்ட செயலர் பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன்பின், க்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. இதன்பின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மதுக்கடைகளை அறிமுகம் செய்தார். தற்போது, தமிழ்நாடு அரசே மது விற்பனையை செய்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழக மக்கள் போராடுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தும் செய்யவில்லை. இளைஞர்கள் அதிக அளவில் மது பழக்கத்துக்கு அடிமையாகுகின்றனர்.

டாஸ்மாக்கில் மட்டும் கடந்த 2 ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் மே 10 -ம்தேதி புகார் கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் செயல்படுகின்றன. ஆனால் 60 சதவீதம் மட்டுமே ஆயத்தீர்வை வருவாய் கிடைக்கிறது. தமிழ்நாடு அரசு காலை 7 மணிக்கெல்லாம் மதுக்கடைகளை திறக்க திட்டமிடுகிறது. அப்படி காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் தமிழ்நாட்டில் புரட்சி தான் வெடிக்கும். டாஸ்மாக் கடைகளை நடத்துவது பற்றி அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

குடிப்பழக்கத்தால் பல வகை பிரச்சினைகள் உருவாகின்றன. இந்தியளவில் மதுகுடிப்போர் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. திமுக எதிர்வரும் தேர்தல்களை சந்திக்கவேண்டும் என்றால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களைவிட்டு வெகு தூரத்துக்கு திமுக சென்றுவிட்டது. மது, நோய் எதிர்ப்பு சக்திகளை குறைக்கும். போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் யார்? என காவல்துறைக்கு நன்றாக தெரியும்.

மது விற்கும் பணத்தில் திமுக கட்சியை வளர்க்கிறது. கள்ளுக் கடைகளால் மக்கள் பாதிக்கின்றனர். மாநில அரசு, மத்திய அரசை பல வகையில் குறைகளை சொல்கிறது. திமுக ஏன் நீட் தேர்வு களை ரத்து செய்யவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி இரண்டரை ஆண்டாகியும் நிறைவேற்றவில்லை. 12 விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமைத்தொகை கொடுப்பது தவறு. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கவேண்டும். அதுவும் நிலுவையுடன் கொடுக்கவேண்டும்.

பழைய சமூகப் பிரச்சினைகளை திரைப்படமாக்கக் கூடாது. தமிழ் திரைப்படங்களில் அரிவாள் கலாச்சாரம், சாதிய தூக்கல், தாக்குதல், ஆபாசம், வன்முறைகள் இருக்ககூடாது. தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற முடியாது. முதல்வர் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் திரும்பி வரும். மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது, மக்களிடம் விளக்கம் கொடுக்க வேண்டும். மக்களிடம் புரிய வைக்காமல் எந்த சட்டத்தையும் கொண்டுவரக்கூடாது. இவ்வாறு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.