ராஞ்சி: பொட்டு வைத்துக் கொண்டு வந்த மாணவியை ஆசிரியை ஒருவர் அடித்ததால் மனமுடைந்த அநத மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் டெட்டுமரியில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு சென்றார். ஆனால் வீட்டிற்கு சிறிது நேரத்தில் எல்லாம் வந்துவிட்டார்.
பள்ளி விடும் முன்பே ஏன் வந்துவிட்டாய் என பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த மாணவி பொட்டு வைத்துக் கொண்டு சென்றதால் காலை பிரார்த்தனை கூட்டத்தில் தனது ஆசிரியை பார்த்து அழைத்து அடித்துவிட்டதாக அழுது கொண்டே சொல்லியுள்ளார்.
இதனால் மிகவும் மனஉளைச்சலால் பாதியிலேயே வீட்டுக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். அப்போது பெற்றோர் அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து பள்ளிச் சீருடையில் இருந்த அந்த சிறுமி தனது அறைக்கு சென்ற அந்த சிறுமி நீண்ட நேரம் வெளியே வரவில்லை.
இதனால் அவருடைய பெற்றோர் அறைக்கு சென்ற போது அறை கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. உடனே கதவை தட்டிய நிலையில் இருந்ததை அடுத்து நீண்ட நேரமாக தட்டியும் மாணவி கதவை திறக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது மாணவி அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு அந்த மாணவியின் சீருடை பாக்கெட்டில் இருந்த ஒரு தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் தனது பள்ளி ஆசிரியையால்தான் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டேன் என எழுதியிருந்தார். குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்த போது பொட்டு வைத்துக் கொண்டு போனதால் ஆசிரியை அடித்ததாக புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் ஆசிரியையும் பள்ளி முதல்வரையும் கைது செய்துள்ளோம். அந்த கடிதத்தில் மாணவி எழுதியிருப்பதாவது: என்னை எல்லார் முன்பும் என்னை ஆசிரியை அடித்துவிட்டார். இந்த அவமானத்தால் நான் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனாலும் என்னால் எனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அந்த மாணவி டீச்சரின் பெயரையும் பள்ளி முதல்வரின் பெயரையும் அந்த தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில் அடுத்த சில மாதங்களில் என் மகள் இன்று உயிருடன் இருந்திருந்தால் அந்த பள்ளியில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்திருப்பார். எனது கணவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது மகள் படிக்கும் பள்ளியில்தான் இரு மகன்களும் படித்து வருகிறார்கள்.
என் மகள் பொட்டு வைத்துக் கொண்டுதான் பள்ளிக்கு சென்றார். ஆனால் ஆசிரியையை பார்த்தவுடன் அவர் பொட்டை தூக்கி எறிந்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால் பொட்டு வச்ச காரணத்திற்காக எனது மகளை எல்லார் முன்பும் ஆசிரியை அறைந்துள்ளார். இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் சொல்ல என் மகள் சென்ற போது அவர் என் மகள் சொல்வதை கேட்க தயாராக இல்லை. மாறாக பொட்டு வைத்துக் கொண்டு வந்தது உன் தவறு, இந்த இடத்தை விட்டு கிளம்பு என கூறிவிட்டார்.
என்னிடம் வந்து என் மகள் சொன்னதும் நான் பள்ளி முதல்வரை சந்தித்தேன். அந்த ஆசிரியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றேன். ஆனால் எனது கோரிக்கைகளை பள்ளி முதல்வர் காது கொடுத்தும் கேட்கவில்லை. இதையடுத்து வீட்டுக்கு வந்த நான் என் மகளை சமாதானம் செய்தேன். இதையடுத்து அவர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி கொண்டிருந்தார். நானும் அவர் பள்ளி ஹோம்வொர்க்கை ஏதோ எழுதுகிறார் என நினைத்தேன். ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் அவர் என்னை விட்டு போய்விட்டார் என கதறி அழுதார்.