பெங்களூரு பெங்களூரு தனியார் நிறுவனத்தில் புகுந்து, இரண்டு அதிகாரிகளை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்த மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரின் அம்ருத்ஹள்ளியில் ‘ஏரோனிக்ஸ் இன்டர்நெட் மீடியா பிரைவேட் லிமிடெட்’ என்ற இணைய சேவை வழங்கும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது.
இதை, பணீந்திரா, வினுகுமார் என்ற இருவர் 2022 நவம்பரிலிருந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 4:00 மணியளவில் காரில் வந்து இறங்கிய மூன்று நபர்கள், பயங்கர ஆயுதங்களுடன் இந்த அலுவலகத்திற்குள் புகுந்து, பணீந்திரா, வினுகுமார் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரது உடல்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை பற்றி கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமணகுப்தா கூறியதாவது:
ஏரோனிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பணீந்திரா, சி.இ.ஓ., வினுகுமார் ஆகியோரை, அவர்களது அலுவலகத்தில் புகுந்து மூவர் கொலை செய்துள்ளனர்.
இதில், இருவரது அடையாளம் தெரியவந்துள்ளது.
தொழில் தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கொலையாளிகளை பிடிக்க, தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கொல்லப்பட்ட இருவரும், பெலிக்ஸ் என்ற ஊழியரும், முன்பு பெங்களூரு பன்னரகட்டாவில் உள்ள இணைய சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பணீந்திரா, வினுகுமார் அங்கிருந்து விலகி, தனியாக நிறுவனம் துவங்கினர்.
இதனால், பெலிக்ஸ் பணிபுரிந்த நிறுவனத்துக்கு வர்த்தகம் குறைந்த அதிர்ச்சியில், அவர் தன் நண்பர்களுடன் இணைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி அம்ருதஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்