டெல்லி சென்ற அண்ணாமலை, ஆர்.என்.ரவி: தமிழகத்தில் என்ன நடக்கப் போகிறது?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது கவனம் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் பாஜகவை கால் ஊன்ற வைக்கும் முயற்சியில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 28ஆம் தேதி முதல் ‘என் மண், என் மக்கள்’ பெயரில் ராமேஷ்வரத்திலிருந்து நடை பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி மாதம் வரை இந்த நடை பயணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், மக்களவைத் தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரங்கள், நடை பயணம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார். அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய அவர் பின்னர் அமித் ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இது தொடர்பாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசிக்குமாறு ஆளுநருக்கு அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார்.

இதனால் டெல்லி சென்று அமித்ஷாவையும், தலைமை வழக்கறிஞரையும் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சேகர்பாபுவுக்கு சாபம் விட்ட ஹெச்.ராஜா!

இந்நிலையில் அண்ணாமலையும் டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெற்று வருகிறது.

பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஹெச்.ராஜா நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை ஆகியோர் தமிழ்நாடு திரும்பியவுடன் பரபரப்பு சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள் அரசியல் வானிலையை கணிப்பவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.