புதுடெல்லி: யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த டெல்லி போக்குவரத்துத் துறை உத்தரவினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் கைலாஷ் காலட் , “யமுனை நதியின் நீர் மட்டம் அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளதால், டெல்லியின் சிங்கு, பதர்பூர், லோனி, சில்லா ஆகிய நான்கு எல்லைகள் வழியாக கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக சிங்கு எல்லையில் நிறுத்தப்படும். உணவு மற்றும் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்தத் தடையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நகருக்குள் புகுந்த வெள்ள நீர்: கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதன்கிழமை (ஜூலை 12) யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி யமுனை ஆற்றில் 208.51 மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தது. இது மாலை 5 மணிக்குள் 208.75 மீட்டர் என்ற அளவை எட்டும் என்று மத்திய நீர் வள ஆணையம் கணித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “யமுனையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது வெள்ளம் யமுனையைச் சுற்றியுள்ள சாலைகளில் புகுந்துள்ளது. அதனால் வெள்ள அபாயம் இருக்கும் பாதைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்களைக் காப்பதே இப்போதைய தலையாய கடமை. இந்த அவசர காலத்தில் மக்கள் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்குமாறு வேண்டுகிறேன். அதேபோல் வாசிர்பாத், சந்தர்வால், ஓக்லா நீரேற்று நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இயற்கைச் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். | வாசிக்க > 50,000+ சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்: இமாச்சலப் பிரதேச பேரிடர் நிலவரம் – ஒரு பார்வை