அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி, பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துவிட்டுத் தலைமறைவான, நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாயைச் சுருட்டிக்கொண்டு ஓடுகிற நிறுவனங்கள் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மதுரையை மையமாக வைத்து பல மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. பல நிறுவனங்கள்மீது வழக்குகள் நடந்து வந்தாலும், மக்களுக்குப் பணம் திருப்பிக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மக்களிடம் பேராசையைத் தூண்டிவிட்டு பெரிய அளவில் மோசடி செய்த நிறுவனம்தான் நியோமேக்ஸ். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், மக்கள் தங்களிடம் முதலீடு செய்கிற பணத்தை நிலம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தில் மாதந்தோறும் 30 சதவிகித வட்டியும், மூன்று வருட முடிவில் கட்டியப் பணத்தை இரட்டிப்பாக தருவதாகவும் முகவர் மூலம் விளம்பரம் செய்தது. நியோமேக்ஸ் பெயரிலும், அதன் சார்பு நிறுவனங்கள் பெயரிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தார்கள்.

நியோமேக்ஸ் நிறுவனத்தின்மீது கடந்த ஒரு வருடமாக புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தாங்கள் செலுத்திய பணம் முதிர்வு தேதிக்குப் பின்பும் திரும்ப வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் அதில் முதலீடு செய்தவர்கள் .
இந்த நிலையில்தான், பணம் திரும்பக் கிடைக்காத முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதரக் குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தனர். அதன்பேரில் நிறுவனத்தின் சேர்மன் கமலக்கண்ணன், இயக்குநர்கள் மற்றும் முகவர்கள் பாலசுப்பிரமணியன், வீரசக்தி, தியாகராஜன், நெல்லை பழனிசாமி, கோவில்பட்டி நாரயணசாமி, அருப்புகோட்டை மணிவண்னன், சிவகங்கை அசோக் மேத்தா, தேவகோட்டை சார்லஸ், கோவில்பட்டி செல்லம்மாள் உள்ளிட்ட 17 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
அவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனை செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிர்வாகிகளில் வீரசக்தி என்பவர் அரசியல் கட்சியில் சேர்ந்து திரைப்படத்துறையிலும் முதலீடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் தலைமறைவான இவர்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தேடி வந்தனர். அதிலிருந்து தப்பிக்க உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் அவற்றைத் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிறுவனத்தின் திருநெல்வேலி கிளை இயக்குநராக இருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சைமன் ராஜா, கபில் ஆகியோரைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். அடுத்ததாக மற்ற நிர்வாகிகளையும் கைதுசெய்வதற்கு தனிப்படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மோசடி செய்த பணம் முதலில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது, “நாற்பதாயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்கள். அனைவரையும் கைதுசெய்து விசாரிக்கும்போதுதான் உண்மை தெரியவரும்” என்று பொருளாதரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறுகின்றனர்.