ஸ்வீட் காரம் காபி
நடிகர்கள்: லட்சுமி, மது, சாந்தி
இயக்குனர் : பிஜாய் நம்பியார், சுவாதி ரகுராமன், கிருஷ்ணா மாரிமுத்து
ஓடிடி: அமேசான் பிரைம்
ஸ்வீட் காரம் காபி வெப் தொடர் அமேசான் பிரைமில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இத்தொடர் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மூன்று தலைமுறை பெண்கள்:’ஸ்வீட் காரம் காபி’ வெப்தொடரின் டிரைலர் வெளியான போதே இத்தொடர் ஆர்வத்தைத் தூண்டியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அத்தை, மருமகள், பேத்தி என மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களை சுற்றியே கதை நகர்கிறது. ரேஷ்மா கட்டாலாவால் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் உறவு,உண்மையான காதல், நட்பு என பலவற்றை கொண்டதாக இருக்கிறது.
இதுதான் சந்தோஷமா: எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரை பிஜாய் நம்பியார், சுவாதி ரகுராமன் மற்றும் கிருஷ்ணா மாரிமுத்து என மூன்று இயக்குநர்கள் சேர்ந்து இயக்கி உள்ளனர். இதில், சுந்தரியாக லக்ஷ்மி நடித்துள்ளார். கணவரின் மரணத்திற்குப் பிறகு, அதீத அன்பு என்ற பெயரில் தனது மகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதே போல அவரது மருமகள் காவேரியாக மதுபாலாவும், மதுவின் மகளாக சாந்தி பாலச்சந்திரனும் நடித்துள்ளனர்.
நெடுந்தூரப்பயணம்: இவர்கள் மூன்று பேரும் அன்பு, பாசம் என்ற பெயரால் குடும்பத்திற்குள் சிக்கி தங்களுக்கு என்று இருக்கும் அழகான வாழ்க்கையை தொலைத்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், சோர்வடைந்த சுந்தரி, காவேரி மற்றும் நிவி மூவரும் ஆண்களிடமிருந்து விலகி நீண்ட நெடுந்தூரம் பயணம் செய்கின்றனர். இந்த பயணத்தின் போது இவர்கள் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து ரசித்து பார்க்கின்றனர்.

ஓவர் டோஸ்: லட்சுமியின் ப்ளாஷ்பேக் காட்சிகளை காட்டி, அவர் தேடுவது முன்னாள் காதலன் என்பதைப் போல கதையை கொண்டு சென்று, கடைசியில் காதலும் இல்லை காதலுனும் இல்லை. அவர் தேடி வந்தது ஒரு தோழியை என்று சஸ்பென்ஸ் உடையும் போது சப்புனு ஆகிவிடுகிறது. உண்மையான நட்பு என்பது உணர்வுப்பூர்வமானது தான். அதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்து பல மணி நேரம் பயணம் செய்து, நட்பை நினைத்து நினைத்து உருகுவது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் டோசாக இருந்தது.

மைனஸ்: மாமியார், கணவன், குழந்தைகள் என்று வாழ்ந்து வரும் காவேரி பயணத்திற்கு முன் செக்ஸ் என்ற வார்த்தையை சொல்லவே தயங்கும் பெண்ணாக இருந்தார். ஆனால், பயணத்திற்கு பின் மாமியாரும் மருமகளும் டீப்பாக அந்த விஷயத்தை கொச்சையாக பேசுவது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஒவ்வொரு பெண்ணும் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் இவை என்றாலும், மனதிற்குள் பூட்டிவைத்து, சிரித்த முகத்தோடு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்று வேஷம் போடும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த வலிகளை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் ‘ஸ்வீட் காரம் காபி’யில் ஏதோ ஒன்னு மிஸ்.