எஸ்வி சேகருக்கு குட்டு வைத்த ஹைகோர்ட்… பெண் பத்திரிகையாளர்கள் வழக்கில் அதிரடி!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. எஸ்விசேகரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் எஸ்வி சேகர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்க பதிவை நீக்கிய எஸ்வி சேகர் மன்னிப்பு கோரினார்.

மேலும் இது தொடர்பான வழக்கு மற்றும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியது மற்றும் தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு என தன்மீது நிலுவையில் உள்ள 3 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்வி சேகர் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டதால் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எஸ்வி சேகர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிக்கட்டிவிட முடியாது என்றார்.

மேலும் தனக்கு வந்த தகவலை ஃபார்வர்டு செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பு என்று கூறிய நீதிபதி, எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.