சென்னையில் நகை மற்றும் பணம் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீதர் எனும் 24 வயது இளைஞன், விசாரணை முடிந்து வீடு திரும்பிய சில மணிநேரத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வெளியான தகவலின்படி, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்திருக்கிறார். மேலும் `பி’ கேட்டகிரி ரெளடியான ஸ்ரீதர் மீது ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருமணமாகி ஒரு குழந்தையுடன் இருக்கும் ஸ்ரீதர், தன்னுடைய மனைவியின் உறவினர்கள் வசிக்கும் எம்.ஜி.ஆர் நகர், பம்மல் நல்லதம்பி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஸ்ரீதர் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசித்துவரும் விஜயலட்சுமி என்பவர், தன்னுடைய வீட்டில் ஒரு சவரன் நகை உட்பட ஐந்தாயிரம் பணம் காணாமல் போனதாக ஜூலை 9-ம் தேதி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
பின்னர் இதில் விசாரணை மேற்கொண்டுவந்த போலீஸார், அந்தப் பகுதி சிசிடிவி கேமிரா காட்சியின்படி ஜூலை 12-ம் தேதி சந்தேகத்தின் பேரில் ஸ்ரீதரை விசாரணைக்காக அழைத்தனர். அதனைத்தொடர்ந்து விசாரித்த எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர், ஸ்ரீதரின் கைரேகையை பதிவுசெய்து அடுத்த நாள் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பியிருக்கிறார். அதன்படி, ஜூலை 13-ம் தேதி மதியம் சுமார் 12:30 மணியளவில் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் மனைவியுடன் ஆஜரான ஸ்ரீதர், விசாரணை முடித்துவிட்டு 1 மணியளவில் மனைவியுடன் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

அப்போது வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே மனைவியுடன் நெஞ்சு வலிப்பதாகக் கூறிய ஸ்ரீதர் உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஸ்ரீதரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு வாயு கோளாறு பிரச்னை இருக்கலாம் என்று கூறி சிகிச்சையளித்து அனுப்பிவைத்தார். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த ஸ்ரீதர், நெஞ்சுவலி என மனைவியிடம் கதறியிருக்கிறார். பின்னர் உடனடியாக ஸ்ரீதர் கே.கே நகரில் உள்ள ESI மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், ஸ்ரீதரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பிறகு, ஸ்ரீதர் எதனால் உயிரிழந்தார் என்பதைக் கண்டறியும் விதமாக உடல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. அதோடு, ஸ்ரீதரை போலீஸார் மனரீதியாக துன்புறுத்தினார்களா? என்பதைக் கண்டறிய தி. நகர் காவல் துணை ஆணையர் அருண் கபிலன் எம்.ஜி.ஆர் நகர் போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீதரின் மனைவி மஞ்சுவிடமிருந்து புகார் மனு பெறப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் மஞ்சு, ஏற்கெனவே தன்னுடைய கணவருக்கு சுமார் 2 மாதத்துக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு கே.கே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றதாகக் கூறினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் தரப்பில், ஸ்ரீதர் உடல் நலக் கோளாறு காரணமாக உண்மையிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது போலீஸார் மனரீதியாகத் துன்புறுத்தியதால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதா? என்ற விவரம் முழுமையான உடற்கூராய்வுக்கு பிறகே வெளிவரும்‘ என்று தெரிவிக்கப்பட்டது.