பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இதன்மூலம் இந்த விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் அந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இந்த விழாவில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாதுகாப்பு படை சார்பில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஏற்றுக்கொள்ள உள்ளனர்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சிறப்பு விமானத்தில் சென்று இறங்கினார். பிரமதர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடி தான் தங்கும் ஓட்டலுக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி அவர்களுடன் கைக்குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு நேற்று இரவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‛‛பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். இது இந்தியாவுக்கான பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ் தான். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட நமக்கு பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும்” என பூரிப்புடன் தெரிவித்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அரண்மனைக்கு சென்றார். அங்கு இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிகர் மேக்ரானுடன் பிரமதர் மோடியை வரவேற்றார். மோடியை, இமானுவேல் மேக்ரான் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு இரவு விருந்து வழங்கினார்.
முன்னதாக பிரான்ஸ் நாட்டின் மிகவும் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த விருதை வழங்கினார். இதன்மூலம் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
இந்த கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்பது பிரான்ஸ் நாட்டின் சார்பில் ராணுவம் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் உயரிய விருதாகும். இதற்கு முன்பு இந்த விருதை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, மாஜி வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் மிகவும் உயரிய விருது வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல், மே மாதம் பப்புவா நியூ கினியாவின் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு, பலாவ் குடியரசின் எபகல் விருது, ஆர்டர் ஆஃப் தி 2021 விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
மேலும் பூடானின் டிரக் கியால்போ, 2020ல் அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட், 2019 ல் பக்ரைனின் கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினாய்ஸ்சன்சன், 2019 ல் ரஷ்யாவின் ரஷ்யாவின் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆர்டர் ஆஃப் சயீத் விருது, 2018 ல் பாலஸ்தீனத்தின் கிராண்ட் காலர் விருது, 2016ல் ஆப்கானிஸ்தானின் காஜி அமீர் அமானுல்லா கான் ஸ்டேட் ஆர்டர், சவுதி அரேபியாவின் ஆர்டர் ஆஃப் அப்துல்அஜிஸ் அல் சவுத் விருது உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.