மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம்(தனி) சட்டசபை தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ராஜா வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கில் அவர் பதில் அளிப்பதற்கு அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேவிகுளம் தனி தொகுதியில் கிறிஸ்தவரான ராஜா போலி ஆவணங்கள் மூலம் ஆதிதிராவிடர் எனக் கூறி கடந்த தேர்தலில் போட்டியிட்டதாக அவரை எதிர்த்து காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற குமார், கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி சோமராஜன், ராஜா வெற்றி பெற்றது செல்லாது என மார்ச் 20ல் உத்தரவிட்டார்.
அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக உத்தரவுக்கு பத்து நாட்கள் இடைக்கால தடை விதித்து மார்ச் 21ல் மறு உத்தரவிட்டார்.
அதன்படி ராஜா உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் எவ்வித சலுகைகளும் இன்றி ராஜா எம்.எல்.ஏ.வாக மட்டும் தொடரலாம் என பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் இறுதியில் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12க்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில் வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜாவின் பூர்வீகத்தார் 1950க்கு பிறகு கேரளாவுக்கு வந்ததாகவும், 1976 வரை ராஜாவின் பெற்றோருக்கு கேரளாவில் சொந்தமாக இடம், முகவரி இல்லை எனவும் குமார் புதிதாக அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
அதற்கு பதிலளிக்குமாறு ராஜாவுக்கு கால அவகாசம் வழங்கி ஜூலை 26க்கு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement