திருவனந்தபுரம்:சம்பளம் உரிய காலத்தில் கிடைக்காததால், குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற, கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த அரசு பஸ் டிரைவர், அதற்காக வாரம் மூன்று நாட்கள் விடுமுறை கேட்டு, அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூ., அரசு உள்ளது. இங்கு அரசு போக்குவரத்து கழகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
கடந்த மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை; பென்ஷனும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என, அம்மாநில உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி டிப்போவில் பணிபுரியும் டிரைவர் அஜு என்பவர், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பல ஆண்டுகளாக முறையான காலத்தில் சம்பளம் கிடைக்கவில்லை. சில மாதங்களில் இரண்டு மாதம் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை.
குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை. சாப்பாட்டுக்கே திண்டாட்டமாக உள்ளது. கூலி வேலைக்கு சென்றால் தினமும், 1,000 ரூபாய் கிடைக்கும். இதற்காக, எனக்கு வாரம் மூன்று நாள் விடுப்பு தர வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த கடிதம் பரவிய நிலையில், கேரள அரசின் மோசமான நடவடிக்கைகள் தான் போக்குவரத்து கழகத்தின் இந்த நிலைக்கு காரணம் என, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement