கலைஞர் நூற்றாண்டு நூலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் நினைவாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் பிறந்தநாளில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், ஹெச் சி எல் நிறுவனர் ஷிவ்நாடார், அவரது மகள் ரோஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாக்க மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டது.

மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி – நாளிதழ்கள் சேமிப்பு பகுதி, நூல்கள் கட்டும் பிரிவு ஆகியவை அமைந்துள்ளன
தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், ஓய்வு அறை, சொந்த நூல்கள் படிக்கும் பகுதி, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
நூலகத்தின் முதலாவது தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் – பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளிட்ட பிரிவுகள் அமைந்துள்ளன.
நான்காவது தளத்தில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக அறிவை கடத்தும் வகையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறாவது தளத்தில் நூல் பட்டியல் தயாரித்தல், நூல் பகுப்பாய்வு மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் அமைந்துள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நூலக பதிவேட்டில் முதல்வர் ஸ்டாலின், “தலைவர் கலைஞர் அவர்களின் நூறாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரை மாநகரில் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம். வாழ்க கலைஞர்” என்று எழுதி கையெழுதிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.