கோவை: கோவை அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசியது: “அனைத்து இடங்களிலும் பணிவாக இருப்பதால் உங்களுக்கு பல லாபங்கள் உண்டு. அனுபவம் உள்ளவர்கள் சொல்வதை கூர்மையாக கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் கட்சிக்காரர் சொல்வதை கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும். வழக்கை எடுத்துச்செல்ல அதில் இருந்து உங்களுக்கு தகவல்கள் கிடைக்கும். நீதிபதிகளும் சிறந்த கேட்புத்திறன் பெற்றவர்களாக இருப்பது நல்லது.
நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். நேர மேலாண்மை குறித்த புத்தகங்களை படித்து பயன்பெறுங்கள். ஏதாவது, ஒரு புத்தகத்தை நேரம் இருக்கும்போது படியுங்கள். அது எப்போதாவது உங்களுக்கு உதவும். தொழில் தொடங்கியுவுடன் நீதிமன்ற நூலகங்களை நன்றாக பயன்படுத்துங்கள். அங்குள்ள தீர்ப்பு திரட்டுகளை படியுங்கள்.
நீதிமன்றத்தில் உங்கள் வழக்குகளை எடுத்துவைக்கும்போது பணிவாக எடுத்து வையுங்கள். நீதிபதியுடன் தரக்குறைவாக பேசுவது, அவமதிப்பது வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்காது. பணிவாக பேசும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி தனி இடம் வைத்திருப்பார். வழக்கு நடத்துவதும் சுலபமாக இருக்கும்.
இளைய வழக்கறிஞர்கள் தொடக்கம் முதலே ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைக்கக் கூடாது. தொடக்கத்தில் ஆடம்பரமாக வாழ்வதால், பல துன்பங்கள் ஏற்படும். இந்த தொழிலில் கடினமாக உழைப்பவர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். நேர்மையாக செயல்படுங்கள். தவறு இருந்தால், எங்கு தட்டிக் கேட்க வேண்டுமோ, அங்கு பயப்படாமல் தட்டிக் கேளுங்கள்.
பொய் வழக்கு என்று தெரிந்தால் அதை நேரடியாக மறுத்துவிடுங்கள். அந்த வழக்கை எடுத்துக்கொள்ளாதீர்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கத்துக்கு முக்கியக் காரணம் பொய் வழக்குகள். ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அது முடிவடையும் வரை நீதிமன்றத்தில்தான் இருக்கும். பொய் வழக்குகள் என்பவை மற்ற வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் காலத்தை நீட்டித்துவிடும்” என்று அவர் பேசினார்.
பின்னர், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, “சட்டமும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒரு அரசை நடத்த சட்டம் வேண்டும். சட்டத்தை பாதுகாக்க நீதித்துறை வேண்டும். சட்டம், அரசு, நீதித்துறை ஆகியவை நாட்டின் முக்கிய மூன்று தூண்கள். மூன்றையும் சுட்டிக்காட்டும் நான்காவது துறையாக பத்திரிகைத்துறை இருக்கிறது. இந்த நான்கு துறைகளும் ஒரு நாட்டில் சிறப்பாக செயல்பட்டால், அந்த நாடு செம்மையாக இருக்கும். தனியார் பல்கலைக்கழககங்களை விட அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது”என்றார்.
இந்த விழாவில், தமிழக சட்டக் கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி, சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்ழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், கோவை அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.