புதுச்சேரி: “நடிப்பவர்கள் கூட படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது” என நடிகர் விஜய் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
“ஆளுநர் தமிழிசை பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசுங்கள்” என புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காமராஜர் பிறந்தநாளையோட்டி புதுச்சேரியில் நடந்த மாணவர் நாள் விழாவில் கலந்துகொண்ட பிறகு வைத்திலிங்கம் தெரிவித்து கருத்து தொடர்பாக ஆளுநர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை, “மக்கள் நலன் சார்ந்த கருத்துகளைதான் பேசுகிறோம். புதுச்சேரியில் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். பேச்சு உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. நான் எவ்வளவு பேச வேண்டும் என்று வரையறுக்கும் உரிமை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்துக்கு இல்லை. அவர் சொல்வது போன்று நான் நடந்து கொள்ள முடியாது. அவர் செல்வது போன்று அவரது கட்சியினரே நடந்து கொள்ள மாட்டார்கள்.
என்னை பொறுத்தவரை நான் என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்வேன். அதைக் கேட்பதற்கு விருப்பமிருந்தால் கேட்கட்டும். இல்லையென்றால் கேட்காமல் போகட்டும். அதை பற்றி எனக்கு கவலையில்லை” என்றார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்வது குறித்து கேட்டபோது, “என்னை பொறுத்தவரை படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. எனக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர் கொள்கை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்பவர்களை பாராட்டுவேன். அதன் உள்நோக்குத்துக்குள் நான் வரவில்லை” என்றார்.
மேலும், “புதுச்சேரியில் கேஸ் மானியம் தேவைப்படுபவர்களுக்கு ரூ.300 கொடுக்கப்படும். சிவப்பு ரேஷன் கார்டு, மஞ்சள் ரேஷன் கார்டு என வேறுபாடு இருக்கிறது. இதனால் மானியம் வழங்குவதிலும் வேறுபாடு இருக்கிறது. மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் இதை பாராட்ட வேண்டும். முதல்வரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.