பாரிஸ்- பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர்’ என்ற விருதை வழங்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கவுரவித்தார். இதன் வாயிலாக, இந்த விருதை பெறும் முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, அந்தநாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறைபயணமாக பாரிஸ் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்ன், விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.
நட்புறவு
இதையடுத்து, அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இமானுவேல் மேக்ரான், தங்கள் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர்’ விருதை, அதிபர் இமானுவேல் மேக்ரான் வழங்கி கவுரவித்தார்.
இதற்கு முன், தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, பிரிட்டனின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் இந்த விருதை பெறும் முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர்’ விருதை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இதை, 140 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாகவே பார்க்கிறேன். விருதை அளித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கும், பிரெஞ்ச் அரசுக்கும், மக்களுக்கும் நன்றி.
இந்தியா மீது பிரான்ஸ் வைத்துள்ள அதீத பாசத்தையும், நம் தேசத்துடன் நட்புறவை மேம்படுத்துவதற்கான உறுதியையும் காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருது, 1802ம் ஆண்டு, நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்டது. இந்த விருது குறிப்பாக பிரான்ஸ் நாட்டவர்களுக்கானது என்ற போதிலும், பிரான்ஸ் நாட்டின் லட்சியங்களுக்கு உதவும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
புதிய பாதை
முன்னதாக பிரான்ஸ் அதிபரும், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும், எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு விருந்து அளித்தனர்.
அதன் பின், பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் இனி பிரான்சிலும் யு.பி.ஐ., பயன்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் ஒரு புதிய பாதையை நோக்கி நகர்கிறது.
பிரான்சில் உள்ள மார்சேயில் புதிய இந்திய துணை துாதரகம் திறக்கப்படும். ஐரோப்பிய நாட்டில் முதுகலை பட்டம் பெறும் இந்திய மாணவர்களுக்கு, ஐந்தாண்டு கால படிப்புக்கு பிந்தைய பணி விசா கிடைக்கும். நான் பல முறை பிரான்சிற்கு வந்திருக்கிறேன். ஆனால், இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில், இந்தியா — பிரான்ஸ் இடையேயான ஆதரவும், உறவும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமை அடைந்துள்ளது.
இரு நாடுகளின் நல்லுறவு துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான இணைப்பு அதிகரித்துள்ளது. பிரான்சில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய தினத்தில் பங்கேற்பு!
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக நேற்று பங்கேற்றார். அப்போது நடந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், நம் முப்படைகளை சேர்ந்த 269 வீரர்கள் பங்கேற்றனர். நம் வீரர்கள் அணிவகுத்து சென்றபோது, ‘சாரே ஜஹான் சே ஹச்சா’ என்ற நம் தேசபக்தி பாடல் முழங்கியது. மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் வீரர்களை பார்த்து சல்யூட் செய்தனர்.அணிவகுப்பு நிகழ்ச்சி முழுதும், பிரான்ஸ் நாட்டின் ராணுவ பாரம்பரியத்தின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடிக்கு, அதிபர் மேக்ரான் உற்சாகத்துடன் விளக்கியபடி இருந்தார். இந்த நிகழ்ச்சியில், பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களில் நம் விமானப்படை வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்