திருச்சூர் அருகே, காட்டு யானையை கொன்று புதைத்த சம்பவம் குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம். சேலக்கரை அருகே உள்ளது மச்சாடு வனச்சரகம். இந்த சரகத்திற்கு உட்பட்ட வாழத்தோடு பகுதியில், ரோய் என்பவரின் ரப்பர் தோட்டத்தில் காட்டு யானையை கொன்று புதைத்திருப்பதாக கிடைத்த, ரகசிய தகவலின் அடிப்படையில், பயோ நேச்சர் கிளப் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வனத்துறையிடம் புகார் அளித்தது.
இதையடுத்து வனத்துறையினர் நேற்று பொக்லைனில், சந்தேகிக்கப்படும் பகுதியில் தோண்டிய போது, காட்டு யானையை கொன்று புதைத்து தெரியவந்தது.
தோட்ட உரிமையாளர் ரோயிடம் விசாரணைக்கு அழைத்த போது, அவர் தலைமறைவில் உள்ளது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.
இது குறித்து, மத்திய மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அனுாப் கூறியதாவது: புதைக்கப்பட்ட 15 வயது தோன்றும் காட்டு யானையின், ஒரு தந்தம் காணாமல் போய் உள்ளது. ஒரு வாரத்திற்கு முன், மற்றொரு வழக்கில் தொடர்பு கொண்டு, ஒரு தந்தம் பறிமுதல் செய்திருந்தோம். அது இந்த யானையின் தந்தம் என்று உறுதி செய்துள்ளோம்.
இது தொடர்பாக, 4 பேர் மானுாரில் பிடிபட்டனர். இனி கொன்றது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். ரோய், பதுங்கி இருப்பது கோவாவில் என்று தெரியவந்துள்ளது.
இவரை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக, வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இப்பகுதி, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். ஒரு மக்னா யானை உட்பட ஒன்பது யானைகள் கூட்டம், இங்கு தினமும் வருவது வனத்தில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாயிலாக கண்டறிந்துள்ளனர்.
இவ்வழக்கை, திருச்சூர் கோட்டம் வன அதிகாரியின் மேற்பார்வையில், மச்சாடு வனச்சரக அதிகாரி ஸ்ரீதேவி மதுசூதனின் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து கால்நடை மருத்துவர் அசோக் கூறுகையில், ‘யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படவில்லை. ஏனென்றால் தந்தம் எடுப்பதற்காக, முகததில் தான் சுடுவார்கள். அதற்குரிய தடயங்கள் ஏதும் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு எப்படி யானைக் கொல்லப்பட்டது என்பது குறித்து, அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தினால் மட்டுமே தெரிய வரும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்