சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் முதல் பாடல் ‘காவாலா’ கடந்த வாரம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடல், வரும் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் இரண்டாவது பாடலின் அப்டேட்டை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஜெயிலர் தமிழ்ப் படம் தானா?:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி.
ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ கடந்த வாரம் வெளியானது. தமன்னாவின் கலக்கலான கிளாமர் டான்ஸுடன் வெளியான ‘காவாலா’ பாடல், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது. அதன்படி, இந்தப் பாடல் வரும் 17ம் தேதி வெளியாகும் என மினி டீசருடன் அறிவித்துள்ளது. அதில், “Hukum… Tiger Ka Hukum” என சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாய்ஸ் இந்தியில் ஒலிக்கிறது. அதனால், இந்தப் பாடல் இந்தியில் உருவாகியுள்ளதா என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பாடல் பெரும்பாலும் தெலுங்கில் இருந்ததாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் இப்போது இரண்டாவது பாடல் இந்தியில் உருவாகியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கன்னட நடிகர் ரஜினி, இந்தி நடிகை தமன்னாவுடன் தெலுங்குப் பாட்டுக்கு நடனமாடியுள்ளார். படத்தின் டைட்டில் ஜெயிலர் என்பதும் ஆங்கிலம் என ட்ரோல்கள் வைரலாகின.
இப்போது செகண்ட் சிங்கிள் அப்டேட்டும் “Hukum… Tiger Ka Hukum” என வித்தியாசமாக வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இப்பாடலுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் தமிழ்ப் படம் தானா என ரசிகர்கள் ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.