புதுடில்லி : புதுடில்லியில், யமுனை நதியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருகிறது.
தலைநகர் புதுடில்லி, ஹரியானா, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது.
இடைவிடாது பெய்த பலத்த மழையால், புதுடில்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியது.
இதனால், நதியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர், புதுடில்லியில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் புகுந்தது.
முக்கிய பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ”யமுனை நதியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது,” என, புதுடில்லி டிவிஷனல் கமிஷனர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து வந்த யமுனை நதியின் நீர்மட்டம், தற்போது குறையத் துவங்கி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது. வெள்ளத்தை கட்டுக்குள் கொண்டு வர அயராது உழைத்து வரும் அரசு அதிகாரிகள் மீது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் பிரதிநிதிகள் கூறக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எனினும் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடியாததால் இயல்பு நிலை திரும்பவில்லை.
கடந்த 13 இரவு 8:00 மணியளவில், 208.66 மீட்டராக இருந்த யமுனை நதி நீர்மட்டம், நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி, 207.43 மீட்டராகக் குறைந்தது. எனினும், 205.33 மீட்டர் என்ற அபாய அளவை விட 2 மீட்டர் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்