அதிமுகவுக்கு ஓபிஎஸ் புற்றுநோயாகத்தான் இருப்பார்… ராஜன் செல்லப்பா கடும் தாக்கு!

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதனை எதிர்த்து முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம் போராடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேருபவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வத்தைதான் மறைமுகமாக அழைக்கிறார் என கூறப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓ பன்னீர்செல்வம், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது வெளிப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள்தான் இருக்கிறார்கள் என்றார்.

இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மன்னிப்பு கடிதம் தொண்டர்களுக்குதான், ஓபிஎஸை வரவேற்க தயாராக இல்லை என்று தடாலடியாக கூறினார்.

தொடர்ந்து

மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பில்லை என்றும் அவர் கட்சிக்கு செய்த துரோகங்களும் தவறுகளும் அதிகம். திமுகவுடனான தொடர்புகளை விட்டுவிட்டு அவரால்

விலகி வர முடியாது என்றும் ராஜன் செல்லப்பா கடுமையாக தாக்கினார்.

மேலும் அதிமுகவை பொருத்தவரை ஓ பன்னீர்செல்வம் புற்று நோயாகத்தான் இருப்பார் என்றும் அவரால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கட்சிக்குள் இருந்து கொண்டே அவர் கட்சியை கெடுத்துவிடுவார் என்றும் கடுமையாக தாக்கியுள்ளார். ஓபிஎஸ் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் அவர் கட்சிக்கு வருவதால் எந்த லாபமும் இல்லை என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

மேலும் கட்சிக்கு இருக்கும் வளர்ச்சியே போதும், மக்கள் மத்தியில் அஇஅதிமுக நிலையான வளர்ச்சி பெறும் என்றும் கூறினார். முன்னதாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் அதிமுகவில் சேர்ப்போம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.