உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நிராகரிப்பார்கள்: ஜமா மசூதியில் அல் இசா திட்டவட்ட பேச்சு

புதுடெல்லி: ‘‘உலகில் எந்த வகையான பயங்கரவாதத்தையும், உண்மையான முஸ்லிம்கள் ஏற்பதில்லை. அவர்கள் மனித குல பாதுகாப்பில் நம்பிக்கை உள்ளவர்கள்’’ என்று முஸ்லிம் வோர்ல்டு லீக் பொதுச் செயலாளர் ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல் இசா திட்டவட்டமாக கூறினார்.

சவுதி அரேபியாவின் மெக்கா நகரை மையமாகக் கொண்டு ‘முஸ்லிம் வோர்ல்ட் லீக்’ என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது. இதன் பொதுச் செயலாளராக ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல் இசா பொறுப்பு வகிக்கிறார். மத்திய அரசின் அழைப்பை ஏற்று இவர் 5 நாள் பயணமாக இந்தியா வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி ஜமா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு இடமே இல்லை. மனிதகுல பாதுகாப்பில் முழு நம்பிக்கை கொண்டது இஸ்லாம். உண்மையான முஸ்லிம் ஒவ்வொருவரிடமும் அன்பாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வார். பயங்கரவாதம் எந்த வகையாக இருந்தாலும் அவற்றை நிராகரிப்பார். உண்மையான முஸ்லிம் சீரிய ஒழுக்கங்களைக் கடைபிடிப்பார். அவரது நடத்தை இஸ்லாத்தின் அழகை வெளிப்படுத்துவாகவே இருக்கும். அத்துடன் இந்த விழுமியங்களை கடைபிடிப்பது ஒரு முஸ்லிமின் உண்மையான நடத்தையின் இன்றியமையாத அம்சமாகும். எந்த சூழ்நிலையிலும் அவற்றை கைவிடக் கூடாது.

இதற்கு நேர்மாறான நடத்தை மிகவும் வருந்தத்தக்கது. இஸ்லாத்தின் உண்மையான சாரத்தை அறியாதவர்களால்தான் சில செயல்கள் நடைபெறுகின்றன. இஸ்லாத்துடன் இணைந்திருப்பதாக பொய்யாக கூறுபவர்களின் செயல்களால் இந்த மதத்தின் மீது தவறான கருத்து ஏற்படுகிறது. எதிர்மறையான நடத்தைகள் அனைத்தும் அல்லாவின் பாதையில் இருந்து விலகி செல்வதாகவே கருதப்படும்.

இஸ்லாம் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர், மக்களால் விரும்பப்படுபவராக இருப்பார். அவரது செயல்கள் இஸ்லாம் மதத்தின் உண்மையான சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். எனவே, ஒரு முஸ்லிம் மிக உயரிய ஒழுக்கங்கள், பரந்துபட்ட ஞானம், அனைவரிடமும் அன்பு மற்றும் நேர்மையுடன் இணைந்து தேசியத்தால் வழிநடத்தப்படுகிறார். இந்த கட்டமைப்பை மதிக்காத எந்த நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், மேம்பாடு போன்றவற்றுக்கு இடம் இருக்காது. இவ்வாறு ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல் இசா பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.