ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸில் 2 நாட்கள் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபிக்கு நேற்று சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் நேரில் வந்து வரவேற்றார்.

தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமதுவை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு இரு நாடுகளின் கரன்ஸியைப் பயன்படுத்துவது, இரு நாடுகளின் டிஜிட்டல் பணப் பரிமாற்ற நடைமுறைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் கிளையை அபிதாபியில் அமைப்பது தொடர்பாக, இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தகம் 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் தற்போது ரூ.6 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. மிக விரைவில் இது ரூ.8 லட்சம் கோடியை எட்டும்.

ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது, இரு நாடுகளிடையே நிலவும் சகோதரத்துவ உறவை வெளிப்படுத்துகிறது. இந்த உறவு மேலும் வலுப்படும்.

இரு நாடுகளின் கரன்ஸிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதன் மூலம், பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுவடையும்.

கடந்த ஆண்டு இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான பொருளாதாரப் பங்களிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். அதிபர் ஷேக் முகமதுவின் முயற்சியால் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது.

இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை மிகப்பெரிய கவுரமாகக் கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

புர்ஜ் கலிபாவில் தேசியக் கொடி: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில், உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புர்ஜ் கலிபாவில் நேற்று இந்திய தேசியக் கொடியின் வர்ணம் ஜொலித்தது. மேலும், பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றது.

ரஷ்யா, சவுதி அரேபியா, இராக் நாடுகளுக்கு அடுத்து இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது. 2022-23 நிதியாண்டு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2-வது இடத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் 3-வது இடத்திலும் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.