புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற கூட்டுறவுத் துறையின் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளின் மாநாட்டில் நேற்று உரையாற்றிய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 55 சதவீதமும், கோதுமைக்கு 51 சதவீதமும் அதிகரித்துள்ளன.
நெல் கொள்முதல் இரு மடங்கு உயர்ந்து 88 சதவீதமாக அதிகரித்துள்ளது. கோதுமை கொள்முதல் கடந்த 9 ஆண்டுகளில் மூன்றில் இரு மடங்கு அதாவது 72 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு கடந்த 2013-14-ம் ஆண்டில் ரூ.21,000 கோடியாக இருந்தது. தற்போது அது 5.6 மடங்கு அதிகரித்து ரூ.1.15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சில விவசாயிகளும், எதிர்க்கட்சியினரும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பேச விரும்புகின்றனர். இது குறித்து அவர்களுடன் எங்கும், எப்போதும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா கூறினார்.