இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் நீடிப்பதால் ஜூலை 20-ந் தேதி வரை இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூர் இணையசேவை தடை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இவ்வன்முறைகளில் 200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
மணிப்பூர் வன்முறை தொடங்கிய முதலே இம்மாநிலத்தில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் பரவாமல் தடுக்க இணையசேவை முடக்கத்தை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த தடையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. ஏற்கனவே ஜூலை 14 வரை இணைய முடக்கம் அமலில் இருந்தது. தற்போது இந்த முடக்கமானது ஜூலை 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிஅ அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உலகத்திலேயே மணிப்பூர் மாநில அரசுதான் இணையத்தை முடக்குகிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருக்கிறது.
இதனிடையே மணிப்பூர் இணைய முடக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவை முடக்கம் தொடர்ந்து அமலில் இருப்பதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. மாநிலத்தில் இணைய சேவை தடையால் பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி சேர்க்கைகளில் பாதிப்பு, ஆன்லைன் மூலம் கட்டணங்கள் கட்டுவது பாதிப்பு என தொடருகிறது என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், இணையசேவையை படிப்படியாக குறிப்பிட்ட இடங்களில் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதில், மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால்தான் இணையசேவை முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்திருந்தது. இம் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.