சென்னை: வங்கதேசத்தில் 200 எம்எல்டி பாக்லா எனர்ஜி நியூட்ரல் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சென்னையைச் சேர்ந்த வி ஏ டெக் வபாக் நிறுவனம் பெற்றுள்ளது.
தலைநகர் டாக்காவில் உள்ள பங்கபந்து சர்வதேச மாநாட்டு மையத்தில் 13-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வி ஏ டெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல், உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டாக்கா தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றல் ஆணையம், சுமார் ரூ.820 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை கடந்த மார்ச் மாதம் வி ஏ டெக் நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த திட்டத்தை கட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும். டாக்கா சானிட்டேஷன் வளர்ச்சி திட்டத்தின் கீழ், உலக வங்கியும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இந்த திட்டத்துக்கான நிதியுதவியை வழங்கும்.
இதுகுறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறும்போது, “பருவநிலை மாற்ற பிரச்சினைக்கான தீர்வை ஊக்குவிப்பதில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வங்கதேசம் முன்னிலையில் உள்ளது என்பதை இந்த திட்டம் உறுதிப்படுத்தும்” என்றார்.