16 ஆண்டுகளுக்கு பின்… சென்னையில் சர்வதேச ஹாக்கி திருவிழா… இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் இருக்கு!

Asian Champions Trophy 2023: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி தொடர் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் நடக்கும் இத்தொடர் சென்னையில் நடைபெறும் என்று ஹாக்கி இந்தியா (HI) சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

2007 ஆசிய கோப்பைக்கு பின்

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. 2007ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை சென்னையில் நடைபெற்ற பிறகு, சென்னையில் நடத்தப்படும் முதல் சர்வதேச ஹாக்கிப் போட்டி இதுவாகும். இதில் ஆடவர் அணிகளுக்கான தொடராகும். 

செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கான ஆயத்த நிகழ்வாகவும் இந்தப் போட்டி அமையும். 

கடைசியாக 2021இல்…

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கடைசியாக 2021இல் வங்காளதேசத்தின் டாக்காவில் நடைபெற்றது. அந்த தொடரின் இறுதிப்போட்டியில், தென் கொரியா அணி, ஜப்பானை பெனால்டியில் தோற்கடித்து தனது முதல் பட்டத்தை வென்றது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது நினைவுக்கூரத்தக்கது.

ஆதிக்கம் செலுத்தும் இந்தியா – பாகிஸ்தான்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும், பாகிஸ்தானும் அதிக முறை சாம்பியன்களான அணிகளாகும். இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றது. பாகிஸ்தான் 2012 மற்றும் 2013இல் சாம்பியன் ஆனது. கனமழை காரணமாக இறுதிப் போட்டி நிறுத்தப்பட்ட பின்னர் ஓமானில் நடைபெற்ற 2018 தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொண்டனர். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்கதேசம் மற்றும் மலேசியா ஆகிய ஆறு அணிகள் பட்டத்துக்காக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

உதயநிதி பெருமிதம்

இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி தொடர் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆடவர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடரை நடத்த இருக்கிறோம் என்று அறிவிப்பதில் SDAT உடன் இணைந்து தமிழ்நாடு அரசு பெருமிதம் கொள்கிறது.

The Government of Tamil Nadu along with SDAT takes immense pride in announcing that we will be hosting the Men’s Asian Hockey Champions Trophy 2023 at the Mayor Radhakrishnan Stadium in Egmore, Chennai from 3rd to 12th August 2023.

The Asian Hockey Championship returns to Namma… pic.twitter.com/O6tV3MOCyx

— Udhay (@Udhaystalin) July 16, 2023

முன்னணி 6 அணிகள்

சர்வதேச ஹாக்கி தொடர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சென்னைக்கு திரும்பியுள்ளது.  உலகின் முதல் பாரிஸ் ஒலிம்பிக் தளத்தில் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய முன்னணி ஆசிய அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஆசியாவின் மிகப் பெரிய ஹாக்கி திருவிழாவுக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். தொடரின் அட்டவணை, போட்டி நேரம், டிக்கெட் குறித்த விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

16 ஆண்டுகளுக்கு பின்…

அதாவது, 2007இல் ஆசிய கோப்பை தொடர் தான் சென்னையில் நடைபெற்றது. அதில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்கும். தற்போது சென்னையில் நடக்க இருக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் முன்னணி அணிகள் மட்டுமே பங்கேற்கும். ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி தற்போது முதல்முறையாக சென்னையில் நடைபெறுகிறது. மேலும், 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி போட்டி சென்னைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | IND vs PAK: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சைக் கருத்து
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.