புதுடில்லி : ‘இந்தியா தன் விமானப் படையைத் தொடர்ந்து, கடற்படைக்காக, 26, ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது’ என, அதை தயாரிக்கும் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
கடற்படைக்கு, 26 ரபேல் போர் விமானங்களை வாங்க, ராணுவக் கொள்முதல் கவுன்சில் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தில் இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
இது குறித்து, ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்தியா, தன் விமானப் படைக்காக, 36 ரபேல் போர் விமானங்களை வாங்கியது. அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக இந்திய விமானப் படை கூறியுள்ளது.
இந்நிலையில், கடற்படைக்காக, 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. கடற்படைகளுக்கான இந்த போர் விமானங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக விளக்கினோம். அதில் முழு திருப்தி ஏற்பட்டுள்ளதால், இவற்றை வாங்க இந்தியா முன்வந்துள்ளது.
இந்தியாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் இவற்றை சுலபமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement