பால்கர்: மஹாராஷ்டிராவில் போலியான, ‘கால் சென்டர்’ எனப்படும், உதவி மையம் நடத்தி, கனடா மக்களை ஏமாற்றி பணம் பறித்த, 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோதனை
மஹாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வாடா தாலுகாவில் உள்ள நானே என்ற கிராமத்தில், போலி உதவி மையம் செயல்படுவதாக, அம்மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று அங்கு அதிரடியாக சோதனை செய்த போலீசார், 23 பேரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
‘எக்ஸ் லைட், ஐ பீம், எக்ஸ் டென்’ போன்ற செயலிகளை பயன்படுத்தி, வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள மக்களின் தகவல்களை இந்த மோசடி கும்பல் திருடி உள்ளது.
அவர்களுக்கு தெரியாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்து, அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை செலுத்தும்படி இந்த கும்பல் மிரட்டி உள்ளது.
குரலை மாற்றி பேசும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இந்த கும்பல், பணத்தை செலுத்தவில்லை என்றால், கிரிமினல் வழக்கு பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
இப்படி பெறும் பணத்தை, பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளில் பெற்றுள்ளனர்.
விசாரணை
இதில், கனடாவைச் சேர்ந்த ஏராளமானோரை இந்த கும்பல் ஏமாற்றி உள்ளது. இந்த மோசடியில், இதுவரை 23 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement