நாடு முழுதும் உள்ள எம்.எல்.ஏ.,க்களில் 44 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடில்லி : புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், ஏ.டி-.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு, தலைமை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் பிரமாணப் பத்திரங்கள் வாயிலாக சமர்ப்பிக்கும் விபரங்களை சேகரித்து, பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சட்டசபை தேர்தல்களின் போது சமர்ப்பிக்கப்பட்ட விபரங்கள் வாயிலாக, நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் குறித்து, அந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
குற்ற வழக்கு
இதன்படி, 28 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் விபரங்களை சேகரித்த இந்த அமைப்பு, மொத்தமுள்ள 4,033 எம்.எல்.ஏ.,க்களில், 4,001 உறுப்பினர்களின் தரவுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
இதன் முடிவில், மொத்த எம்.எல்.ஏ.,க் களில் 44 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
தகவல்களை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,க் களில், 1,136 பேர் அதாவது, 28 சதவீதம் பேர், கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்கு களை சந்தித்து வருகின்றனர். கேரளாவில் மொத்தமுள்ள, 135 பேரில், 95 பேர் அதாவது, 70 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கி உள்ளனர்.
சொத்து மதிப்பு
பீஹாரில், 242 எம்.எல். ஏ.,க்களில், 161 பேரும், புதுடில்லியில், 70 எம்.எல்.ஏ.,க்களில், 44 பேரும், மஹாராஷ்டிராவில், 284 எம்.எல்.ஏ.,க்களில், 175 பேரும், தெலுங்கானாவில், 118 எம்.எல்.ஏ.,க்களில், 72 பேரும், தமிழகத்தில், 224 எம்.எல்.ஏ.,க்களில், 134 பேரும் கிரிமினல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.
அதே போல், புதுடில்லியில், 53 சதவீதத்தினர், பீஹாரில், 50 சதவீதத்தினர், மஹாராஷ்டிராவில், 40 சதவீதத்தினர், ஜார்க்கண்டில், 39 சதவீதத்தினர், தெலுங்கானாவில், 39 சதவீதத்தினர், உத்தர பிரதேசத்தில், 38 சதவீதத்தினர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில், 114 பேர் மீது, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.
இவர்களில் 14 பேர், பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
கிரிமினல் குற்றப் பதிவுகள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்புகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்படி, ஒரு எம்.எல்.ஏ.,வின் சராசரி சொத்து மதிப்பு, 13.63 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. இதில், கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 16.36 கோடி ரூபாயாகவும், குற்ற வழக்குகளில் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக, 11.45 கோடி ரூபாயாகவும் உள்ளன.
எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பில், 64.39 கோடி ரூபாயுடன், கர்நாடகா முதலிடத்திலும்; 28.24 கோடி ரூபாயுடன் ஆந்திரா இரண்டாம் இடத்திலும்; 23.51 கோடி ரூபாயுடன், மஹாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மொத்தம் 59 எம்.எல்.ஏ.,க்களை உடைய வடகிழக்கு மாநிலமான திரிபுரா, குறைந்த சராசரி மதிப்பாக 1.54 கோடி ரூபாயுடன் உள்ளது.
பகுப்பாய்வு செய்யப்பட்ட, 4,001 எம்.எல்.ஏ.,க்களில், 88 பேர், அதாவது, 2 சதவீதம் பேர், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
இவர்கள், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ஆவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்