அபுதாபி: இரு தரப்பு வர்த்தகத்தை, உள்நாட்டு கரன்சியில் மேற்கொள்வதற்காக, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதைத் தவிர, மொபைல்போன் வாயிலான பரிவர்த்தனையை பரஸ்பரம் செய்யும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தை முடித்து, மேற்காசிய நாடான, யு.ஏ.இ.,க்கு நேற்று சென்றடைந்தார்.
அந்த நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நேற்று இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை, உள்நாட்டு கரன்சியில் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒத்துழைப்பு
இதன்படி, இந்திய ரூபாய் மற்றும் யு.ஏ.இ., திராமில் இனி வர்த்தகம் செய்ய முடியும்.
இதற்கான ஒப்பந்தத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், யு.ஏ.இ., மத்திய வங்கியின் கவர்னர் கலீத் முகமது பலாமா கையெழுத்திட்டனர்.
இதைத் தவிர, நம் நாட்டில் பிரபலமான, மொபைல்போன் வாயிலாக பரிவர்த்தனை செய்யும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை முகமை மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள, ஐ.பி.பி., எனப்படும் உடனடி பரிவர்த்தனை தளத்தை இணைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
யு.ஏ.இ., அதிபருடனான சந்திப்புக்குப் பின், பிரதமர் மோடி கூறியதாவது:
இரு நாட்டுக்கும் இடையே, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்தாண்டு கையெழுத்தானது. இதன்பின், இரு நாட்டுக்கும் இடையேயான வர்த்தகம், 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது, இரு நாடுகளும் உள்நாட்டு கரன்சியில் பரிவர்த்தனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது, இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது.
அதிபர் நஹ்யானின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை பிரமிக்க வைக்கிறது. கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் இரு நாட்டுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பல துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தோம்.
இரு நாட்டுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் மற்ற உறவுகள் வலுவடைவதற்கு, அவருடைய பங்களிப்பு மிகச் சிறந்ததது.
அவர், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பராக விளங்குகிறார்.
பருவநிலை மாறுபாடு தொடர்பான அடுத்த சர்வதேச மாநாட்டுக்கு, யு.ஏ.இ., தலைமையேற்றுள்ளது. இந்தாண்டு இறுதியில் நடக்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஐ.டி., வளாகம்
புதுடில்லி ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் வளாகத்தை, யு.ஏ.இ.,யின் அபுதாபியில் துவக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் ஜான்சிபாரில், சென்னை ஐ.ஐ.டி.,யின் வளாகம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்