சென்னை: T.Rajendar (டி.ராஜேந்தர்) இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் குறித்து நடிகர் தியாகு வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்தர் ஏவிசி கல்லூரியில் எம்.ஏ படித்தவர். தனது வீதியில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் தன்னிடம் இருக்கும் சிறிய சிறிய பொருள்களை கொண்டு வாசித்தே அருகில் இருப்பவர்களை ஆட வைத்தவர். அப்படிப்பட்ட மகா திறமைசாலி 1980ஆம் ஆண்டு ஒருதலைராகம் என்ற கதையை எழுதினார். படத்தை தயாரித்து இப்ராஹிம் இயக்கினார்.
ஒருதலை ராகம் வாசித்த டி.ஆர் : 80ஸ் கிட்ஸுக்கு ஒருதலை ராகம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. காதல் கதைதான் என்றாலும் அதில் இருந்த எமோஷனும், எழுதப்பட்ட வசனங்களும் வேறு ஒரு ஃபீலை கொடுத்ததால் அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக டி.ராஜேந்தர் அந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்ததால் அத்தனையும் தெரிந்த கலைஞனை கோலிவுட் பலமாக வரவேற்றது.
ரூல் செய்த ராஜேந்தர்: ஒருதலை ராகம் படம் கொடுத்த பெரும் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய வசந்த அழைப்புகள் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அடுத்ததாக அவர் இயக்கிய ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, தங்கைக்கு ஓர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி உள்ளிட்ட படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அவர் எழுதி இயக்கிய அத்தனை படங்களும் காதலையும், உறவுகளையும் மையப்படுத்தியிருந்ததால் குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாளியாக மாறினார் டி.ராஜேந்தர்.
இசையமைப்பாளராகவும் வென்ற டி.ஆர்: 80களில் இசை என்றாலே இளையராஜாதான் என்ற சூழல் நிலவியது. ஒரு இயக்குநர் இசையமைப்பாளராக மாறுவது அந்தக் காலகட்டத்தில் யாரும் யோசிக்க முடியாததாக இருந்தது. ஆனால் அதை உடைத்துக்காட்டியது பாக்யராஜும், டி.ராஜேந்தரும். இளையராஜாவுடன் மோதல் என்ற காரணம் உள்ளுக்குள் இருந்ததால் பாக்யராஜ் இசையை கற்றுக்கொண்டு இசையமைப்பாளராக மாறினார். ஆனால் டி.ராஜேந்தருக்குள் அடிப்படையிலேயே இசை அறிவு இருந்தது.

ஃபேமஸான தாடி: சினிமாவில் இருப்பவர்கள் தாடி வைப்பது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலானோர் கதைக்கு தேவை என்றால் தாடி வைப்பார்கள். ஆனால் டி.ராஜேந்தர் பல வருடங்கள் தாடியை எடுக்காமலே இருக்கிறார். அவரது அடையாளங்களில் தாடியும் ஒன்றாகிப்போனது. இத்தனை வருடங்கள் டி.ஆர். தாடி எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என பலர் யோசித்ததுண்டு. இந்தச் சூழலில் டி.ராஜேந்தர் தாடி வைத்ததற்கான காரணம் குறித்து நடிகர் தியாகு பேசியிருக்கிறார்.
தியாகு பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “டி.ராஜேந்தர் தாடி வளர்க்க காதல் தோல்விதான் காரணம். மயிலாடுதுறையில் தான் வசித்த தெருவில் இருந்த உஷா என்பவரை ராஜேந்தர் காதலித்தார். உஷாவும் காதலிக்கத்தான் செய்தார். ஆனால் இருவரது வீட்டிலும் காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக பிரிந்துவிட்டார்கள். அந்தக் காதல் தோல்வியால்தான் டி.ஆர். இன்றுவரை தாடி வைத்துக்கொண்டிருக்கிறார்” என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் டி.ஆருக்குள் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.