அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி.. அதிகாரிகள் கையில் முக்கிய ஃபைல்ஸ்.. இரவு என்ன நடக்கும்?

சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டிருக்கும் நிலையில், இரவு என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இங்கு பார்ப்போம். குறிப்பாக, பொன்முடி தொடர்பான மிக முக்கியமான ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் கைது நடவடிக்கை வரை கூட செல்லலாம் என விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் ரூ.28 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு இன்னும் முடிவடையாததால், தற்போது இதை அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 7 மணி முதலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 13 மணிநேர சோதனையின் முடிவில் இரவு 9 மணியளவில் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகளின் கையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், ரூ.70 லட்சம் ரொக்கம், பல நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த ஆவணங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று இரவு கேள்விகள் கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள். இரவு முழுக்க இப்படி துருவி துருவி கேள்விகள் கேட்கப்படும். ஒருவேளை, அவரது பதிலில் திருப்தி இல்லாமல் இருந்தாலோ அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்டாலோ அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.