புதுடெல்லி: அமேசானில் அருண் குமார் மெஹர் என்பவர் ரூ.90 ஆயிரத்துக்கு நவீன கேமரா லென்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஜூலை 6-ம் தேதி அவருக்கு அமேசானிலிருந்து பார்சல் டெலிவரியானது. அதை திறந்து பார்த்த போது, சீமைத் தினை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதன் மதிப்பு ரூ.300 என்று கூறப்படுகிறது.
தன்னுடைய ரூ.90 ஆயிரம் பணம் ஏமாற்றப்பட்டுவிட்ட நிலையில், இந்தப் பிரச்சினைக்கு ட்விட்டர் வழியாக தீர்வு காண அவர் முடிவு செய்தார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த மோசடி குறித்து அவர் பதிவிட்டார். “நான் ரூ.90 ஆயிரம் மதிப்பில் கேமரா லென்ஸை அமேசான் தளத்தில் ஆர்டர் செய்தேன். எனக்கு வந்த பார்சலில் கேமரா லென்ஸுக்கான பேக் திறந்த நிலையில் இருந்தது. அதன் உள்ளே கேமராவுக்குப் பதிலாக சீமைத் தினை இருந்தது. இது பெரும் மோசடி. இந்தப் பிரச்சினைக்கு அமேசான் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். நான் ஆர்டர் செய்த லென்ஸை எனக்கு அனுப்புங்கள். அல்லது என்னுடைய பணத்தைத் திருப்பித் தாருங்கள்” என்று அவர் அதில் பதிவிட்டார்.
அவருடைய இந்தப் பதிவுக்கு, “உங்களுக்கு நிச்சயம் நாங்கள் உதவுகிறோம்” என்று அமேசான் பதிலளித்துள்ளது.
அருண் குமாரின் ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது. ஆன்லைனின் ஆர்டர் செய்தபோது மோசடி செய்யப்பட்ட கதைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.