பெங்களூருவில் இன்றும், நாளையும் 26 கட்சிகள் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் திடீர் சோதனை மேற்கொண்டுவருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் மீதான எரிச்சலின் வெளிப்பதாகத்தான் அமலாக்கத்துறையை பாஜக ஏவியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சாடியிருக்கிறார்.

எதிர்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வதற்காக பெங்களூரு புறப்படும் முன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காகப் பீகாரைத் தொடர்ந்து கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு இது மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அமலாக்கத்துறையை ஏவி, வடமாநிலங்களில் செய்ததை தமிழ்நாட்டில் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
ஆனால் அதைப்பற்றி தி.மு.க கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தப்படுவதை பொறுத்தவரையில் இந்த வழக்கு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது புனையப்பட்ட பொய் வழக்கு. இது 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகள் அ.தி.மு.க தான் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இதைப்பற்றி எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
அண்மையில் கூட பொன்முடி மீது கடந்த கால ஆட்சியில் சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த வழக்கை சட்டரீதியாக அவர் சந்திப்பார். எது எப்படி இருந்தாலும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதில் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. கர்நாடகாவைத் தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடைபெறவிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக அவர்கள் செய்து கொண்டிருக்கக் கூடிய தந்திரம் தான் இது. மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் எங்களுக்காகத் தேர்தல் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. எனவே தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

மேலும், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காவிரி பிரச்னை குறித்துப் பேசப்படுமா என்ற கேள்விக்கு “காவிரி மேக்கேதாட்டூ அணை பிரச்னையைப் பொறுத்தவரையில், கலைஞர் முடிவு செய்த பணிகளில் கிஞ்சிற்றும் நாங்கள் நழுவாமல் தொடர்ந்து அதனைக் கடைபிடிப்போம். இந்தக் கூட்டம் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக நடத்தப்படக்கூடிய கூட்டம், காவிரி பிரச்னைக்காக நடத்தப்படக்கூடிய கூட்டம் அல்ல. இந்தியாவுக்கே இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இந்தக் கூட்டம் நடக்கிறது” என்று பதிலளித்தார்.