கராச்சி: பாகிஸ்தானில் தமிழர்கள் நிர்வகித்து வந்த (Madrasi Hindu community) 150 ஆண்டுகள் பழமையான மாரி மாதா என்ற மாரியம்மன் ஆலயம் மர்ம நபர்களால் இடித்து ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு விடுதலை மற்றும் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கராச்சியில் குடியேறினர். கராச்சியிலேயே தலைமுறைகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். இன்றளவும் தமிழ் மொழியை பேசுகின்றனர்; தமிழர் கலாசாரத்தை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சி நகரில் சிறியதும் பெரியதுமான இந்து கோவில்கள் உள்ளன. இதில் Madrasi Hindu community என்கிற தமிழர்கள் கட்டுப்பாட்டின் கீழான மாரியம்மன் கோவில்களும் அடக்கம். இந்த கோவில்களில் தமிழ்நாட்டு வழிபாடுகள் இம்மியளவும் மாறாமல் இன்றும் பின்பற்றப்பட்டும் வருகின்றன.
இந்த மாரியம்மன் கோவில்களில் ஒன்று கராச்சியின் சோல்ஜர் பஜார் காவல்நிலையம் அருகே அமைந்திருந்தது. இந்தக் கோவிலுக்கு குறிவைத்த ஆக்கிரமிப்பு கும்பல் புல்டோசர் கொண்டு கோவிலை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த கோவில் நிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் வணிக வளாகம் கட்டவும் இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கும்பல், இந்து கோவிலை இடிக்கும் போது அப்பகுதியில் போலீசாரும் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இந்து கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அச்சமடைந்துள்ளனர்.