கோபால்கஞ்ச் : பீஹாரில் அளவுக்கு அதிகமாக, ‘மோமோ’ எனப்படும் கொழுக்கட்டைகளை சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பீஹார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் விபின் குமார், 25.
இவர், அங்குள்ள மொபைல் போன் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் வேலைக்கு சென்ற அவர், மாலையில் தன் நண்பர்களுடன் அங்குள்ள ஹோட்டலில் மோமோ சாப்பிட்டுஉள்ளார்.
அப்போது, அதிக மோமோக்களை யார் சாப்பிடுவது என்று அவர்களிடையே போட்டி ஏற்பட்டது.
இதில், விபின் குமார் 150க்கும் மேற்பட்ட மோமோக்களை சாப்பிட்டதாக தெரிகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் விபின் குமார் மயங்கி விழுந்தார்.
நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், விபின் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி அறிந்த போலீசார், விபின் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அவர்கள், ‘பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்புக்கான காரணம் தெரிய வரும்’ என்றனர்.
இதற்கிடையே, விபின் குமாரை அவரது நண்பர்கள் கொலை செய்ய சதி செய்ததாக, விபினின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும் விபின் குமாரின் பெற்றோர், போலீசில் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement