Live : விசாரணை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி!

விசாரணை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி!

அமைச்சர் பொன்முடி கைது இல்லை என அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசரி தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை நிறைவுக்கு வந்தது.

அமைச்சர் பொன்முடி

விசாரணை முடிந்து அங்கிருந்து கிளம்பிய அமைச்சர் பொன்முடி, சைதாப்பேட்டையிலுள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார். மேலும், இன்று மாலை 4 மணிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

சாஸ்திரி பவனில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணையைத் தொடங்கியது அமலாக்கத்துறை!

அமைச்சர் பொன்முடியை சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனில் வைத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி!

பொன்முடி

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவந்தனர். சுமார் 13 மணி நேரம் நீடித்த சோதனையின் தொடர்ச்சியாக, தற்போது பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய சைதாப்பேட்டை இல்லத்திலிருந்து சாஸ்திரி பவனுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் பொன்முடியின் காரிலேயே அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. சாஸ்திரி பவனில் விசாரணை முடிந்த பின்னரே, அமைச்சர் பொன்முடி கைதுசெய்யப்படுகிறாரா என்பது தெரியவரும்.

`எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் நேரத்தில் ED சோதனை…’ – கார்கே கண்டனம்!

“எதிர்க்கட்சிகளின் முக்கியமான கூட்டம் நடைபெறவிருக்கும் நேரத்தில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தும் சோதனையைக் கண்டிக்கிறோம். எதிரணியினரை மிரட்டி, அவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் மோடி அரசின் ஸ்க்ரிப்ட்டாகத்தான் இதைப் பார்க்கிறோம். மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம்கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டிருக்கின்றன” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

`அமலாக்கத்துறையை வைத்து  பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது’ – கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

“தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை சோதனையை வன்மையாகக் கண்டிக்கிறோம். கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்தப் பார்க்கின்றனர். அமலாக்கத்துறை அமைப்பை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை உங்களால் பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

`மோடி அரசு தேர்தலில் தோற்கடிக்கப்படுவதைப் பற்றி ஆலோசிக்க நாங்கள் கூடுகிறோம்’ – வைகோ

வைகோ – முதல்வர் ஸ்டாலின்

“மத்திய அரசின் ஏஜென்சிகளை வைத்து எதிர்க்கட்சிகளை பா.ஜ.க ஒடுக்குவதைப் பற்றிதான் இன்றும், நாளையும் நாங்கள் விவாதிக்கப் போகிறோம். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற வகையில்தான் மத்திய அரசு இந்த ஏஜென்சிகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதே எங்களுடைய குற்றச்சாட்டு. மோடி அரசு தேர்தலில் தோற்கடிக்கப்படுவதைப் பற்றி ஆலோசிக்க நாங்கள் கூடுகிறோம்.” – பெங்களூரு விமான நிலையத்தில் வைகோ

“பிறந்தநாள் மேடையில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகம், கல்வி நிறுவனம், தொழில் நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருக்கும் இன்றைய நாளில், தி.மு.க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச்ச சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மார்ச் 1-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடிய தன்னுடைய பிறந்தநாள் மேடையில் முதல்வர் ஸ்டாலின், `யார் பிரதமராக வர வேண்டும் என்பது முக்கியமல்ல, யார் பிரதமராக வரக் கூடாது என்பதே முக்கியம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அன்றிலிருந்து ஒன்றிய அரசு, ஆளுநர் மூலமாகவும் தற்போது அமலாக்கத்துறை மூலமாகவும் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறது.

பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தைத் திசைதிருப்ப அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இப்போது அவர் வீட்டைச் சோதனை செய்து நெருக்கடி கொடுக்க நினைப்பது எவ்வளவு பெரிய கூத்து என்பது எல்லோருக்கும் தெரியும். அமலாக்கத்துறைக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா என்பது பற்றியே வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதேபோல் `அமலாக்கத்துறையின் இயக்குநராக இருந்தவருக்கு கண்மூடித்தனமாகப் பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கிறீர்கள். இது சட்டவிரோதமானது, செல்லாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, இன்றைக்கு இவ்வளவு ஆர்வமும், ஆவேசமும் காட்டுகின்றவர்கள் அமலாக்கத்துறையால் போடப்பட்ட எந்த வழக்கிலாவது குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நூற்றுக்கு இரண்டு பேர்கூட இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இதேபோல்தான் கர்நாடகாவில் டி.கே.சிவகுமாரின் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். அதன் பிறகு இந்தியாவிலேயே அதிகமாக ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் டி.கே.சிவகுமார் வெற்றிபெற்றார். எனவே, மோடி அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கர்நாடகாவில் பா.ஜ.க-வுக்கு என்ன ஏற்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். இதையெல்லாம் காட்டி எங்களை மிரட்ட முடியாது. இன்னும் ஐந்து மாதம்தான் அவர்களின் ஆட்சி இருக்கிறது. பொன்முடி விவகாரம் அகில இந்திய பிரச்னையாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று பா.ஜ.க-வுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

“ஜெயலலிதா காலத்து வழக்கு; பொன்முடி சட்டப்படி சந்திப்பார்!”

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. மொத்தம் 26 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றன. தி.மு.க சார்பில் முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக பெங்களூரு செல்ல அவர் சென்னை விமான நிலையம் வந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவுக்கு ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காக்கவே, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டிருக்கிறது. அமலாக்கத்துறை சோதனையைக் கண்டு கிஞ்சித்தும் அஞ்சவில்லை. பொன்முடி மீது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பொன்முடி சட்டப்படி அதைச் சந்திப்பார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைக் கண்டு பா.ஜ.க எரிச்சலடைந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே இந்தச் சோதனை” என்றார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைதுசெய்தனர்.

அமைச்சர் பொன்முடி

அதன் பின்னர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி, இதய அறுவை சிகிச்சை, நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் என அரங்கேறிய நிகழ்வுகளுக்குப் பின்னர், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், `செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என உத்தரவிட்டது. இது அமலாக்கத்துறைக்குச் சாதகமாக அமைந்திருக்கும் இந்த வேளையில்தான், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

முன்னதாக 1996 – 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில்தான் விடுவிக்கப்பட்டார். இது நடந்து 10 நாள்களே ஆகியிருக்கும் நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்திலுள்ள பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். மேலும், பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை ரெய்டு – விழுப்புரம்

மொத்தமாக ஐந்து இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறிருக்க எதன் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் சோதனைக்கான காரணம் குறித்த அறிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.