கராச்சி: காதலனைத் தேடி, நான்கு குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண், அந்நாட்டு சமூக விதிமுறைகளை மீறியதாகக் கூறிய அவரது குடும்பத்தினர், அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு வர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சீமா, 30. இவரின் கணவர் குலாம் ஹைதர், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2019ல், ‘பப்ஜி’ ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட சீமாவுக்கு, இந்தியாவைச் சேர்ந்த சச்சின், 22, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் காதலித்த நிலையில், பாகிஸ்தானில் கணவர் வாங்கி தந்த வீட்டை விற்ற சீமா, தன் நான்கு குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டு, நேபாளம் வழியாக சட்டவிரோதமாக ஒரு மாதத்துக்கு முன் இந்தியா வந்தார்.
புதுடில்லி அடுத்த கிரேட்டர் நொய்டாவில் உள்ள காதலன் சச்சின் வீட்டில், விதிகளுக்கு புறம்பாக ஒரு மாதத்துக்கு மேலாக அவர் தங்கி இருந்தார்.
இதையறிந்த போலீசார், சீமா, அடைக்கலம் கொடுத்த சச்சின், அவரின் தந்தை ஆகியோரை கைது செய்தனர்.
சமீபத்தில் மூவருக்கும் ஜாமின் கிடைத்ததை அடுத்து, சச்சின் வீட்டில் குழந்தைகளுடன் சீமா தங்கியுள்ளார்.
‘விரைவில் ஹிந்து மதத்துக்கு மாறி, காதலன் சச்சினை திருமணம் செய்து கொள்வேன். கணவருடன் திருப்பி அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்’ என, அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீமா மீண்டும் பாகிஸ்தான் வந்தால், கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது:
எல்லை தாண்டி சென்ற இஸ்லாமிய பெண், வயதில் இளைய ஹிந்து ஆணை திருமணம் செய்ய துணிந்தது, எங்கள் கோபத்தை அதிகரித்து உள்ளது.
பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த மத சமூக விதிமுறைகளை சீமா மீறிவிட்டார்.
அவர் இந்தியாவில் இருப்பது தான் நல்லது. பாக்., வந்தால் கடுமையான தண்டனை நிச்சயம். அவர் அங்கேயே இருக்கட்டும். குழந்தைகளை திருப்பி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்