புதுச்சேரி: சோதனை ஓட்டமாக சென்னையில் இருந்து புறப்பட்ட நீராவி இன்ஜின் வடிவ சுற்றுலா ரயில் நேற்று மதியம் புதுச்சேரி வந்தடைந்தது.
தெற்கு ரயில்வே, திருச்சி பொன்மலை, பெரம்பூர் கேரேஜ், ஆவடி பணிமனை இணைந்து, நீராவி ரயில் இன்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரயிலை வடிமைத்தது. இந்த ரயிலை சென்னை-புதுச்சேரிக்கு இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
சென்னை எழும்பூரில் காலை 9:20 மணிக்கு புறப்பட்ட ரயில் மதியம் 1:00 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தது. இதில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், திருச்சி கோட்ட பொது மேலாளர் மனிஷ் அகர்வால் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பயணித்தனர்.
சுற்றுலா ரயலில் மூன்று சொகுசு ஏசி பெட்டிகளும், ரெஸ்ட்ரான்ட் வடிவிலான பேன்டரி பெட்டியும், இரு பக்கத்திலும் இரண்டு மின்சார இன்ஜின் இணைக்கப்பட்டு இருந்தது.
பழங்கால ரயில் பயணத்தை நினைவு கூறும் வகையில், நீராவி புகை வெளியேறுவது போல் ஹாரன் ஒலித்தப்படி வந்த ரயிலில், சொகுசு இருக்கைகள், சுற்றுலா இடங்களை காணும் வகையில் கண்ணாடி கூரை, அதிநவீன கழிவறை, பெரிய ஜன்னல்கள் இருந்தன.
ரயில் செல்லும் வேகம், அடுத்து வரும் ரயில் நிலையம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும் டிஜிட்டல் திரை வசதியும் உள்ளது. புதுச்சேரி ரயில் நிலையம் வந்த சுற்றுலா ரயிலுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement