நைரோபி:
இயேசுவை நேரில் பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறி 400-க்கும் மேற்பட்டோரை உணவு சாப்பிட விடாமல் செய்து அவர்களை கொலை செய்த கொடூர மதபோதகர் கென்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதங்களால் எப்பொழுதுமே எந்த பிரச்சினையும் ஏற்பட்டது கிடையாது. மாறாக, மதங்களின் பெயரை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள், அரசியல் ஆதாயம் தேடுபவர்களால்தான் இந்த உலகில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மத நம்பிக்கையை தாண்டி மத வெறியை மக்களின் மனதிற்குள் விதைப்பது மட்டுமே அவர்களின் வேலை. அதை சரியாக செய்தாலே பகுத்தறிவு அழிந்து மூட நம்பிக்கை மனதை ஆட்கொண்டுவிடும். பிறகு, மற்றவற்றை அதே பார்த்துக் கொள்ளும்.
அப்படியொரு சம்பவம்தான் கென்யாவில் நடந்திருக்கிறது. கென்யாவின் மலிண்டி நகரைச் சேர்ந்தவர் மேக்கன்ஸி. இவர் கடந்த 2003-ம் ஆண்டு குட்நியூஸ் இண்டர்நேஷனல் என்ற பெயரில் கிறிஸ்தவ மத அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் ஏராளமான பிரசகங்களை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார் மேக்கன்ஸி.
இந்த சூழலில்தான், மேலும் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில், “இயேசுவை பார்க்க விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், நான் அவரை காட்டுகிறேன்” என நோட்டீஸ் அடித்து ஊர் ஊராக ஒட்டினார். இதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் செலுத்தினர்.
பின்னர் குறிப்பிட்ட நாளன்று அவர்களில் 400 பேரை மேக்கன்ஸி தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, அவர்களை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மேக்கன்ஸி, நான் சொல்லும் நாள் வரை உணவு , நீரின்றி பட்டினியாக கிடந்தால் கடவுளை பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பி அவர்களும் பட்டினி கிடக்க தொடங்கினர். சில நாட்களுக்கு மேல் பசி தாங்க முடியாமல் பலர் அங்கிருந்து செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை மேக்கன்ஸியின் அடியாட்கள் தடுத்தி நிறுத்தினர்.
இந்தக் கொடூர சம்பவத்தில் அந்த 400 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் அங்குள்ள இந்திய பெருங்கடல் அருகே உள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்டனர். ஆனால், இறந்தவர்களின் உறவினர்கள் யாருக்கும் மேக்கன்ஸியின் ஆட்கள் இதை தெரிவிக்கவில்லை. அவர்களை தேடி வந்த உறவினர்களிடம், அவர்கள் இயேசுவை பார்க்க சென்றுள்ளதாகவும், சில நாட்களில் திரும்பிவிடுவார்கள் எனவும் கூறியுள்ளனர். ஆனால், மாதக்கணக்காக அவர் திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்கள், இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் அண்மையில் போலீஸார் நடத்திய சோதனையில், 400 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இனப்படுகொலை என்று வழக்கு பதிவு செய்த போலீஸார், மதபோதகர் மேக்கன்ஸி, அவரது மனைவி மற்றும் 16 பேரை கைது செய்துள்ளனர். 400 அப்பாவி மக்களை ஏமாற்றி கொலை செய்த அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கென்ய மக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.