பொன்முடி கவலைப்படவில்லை, அச்சப்படவில்லை: டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று காலை 7 மணி முதல் விசாரணை மேற்கொண்டது. பின்னர் இரவு 8 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டார்

சுமார் 19 மணி நேரம் பொன்முடியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினார். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பொன்முடி மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முதல் பொன்முடி இல்லத்திற்கு தமிழக அமைச்சர்கள்,

நிர்வாகிகள் வருகை தந்து சந்தித்து பேசினர்.

திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு எதிர்கட்சிகளின் கூட்டத்தைக் கண்டு அச்சப்பட்டு, ஏதாவது ஒருவகையில் திமுகவுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத் துறை சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.

பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு !

இந்த வழக்கு 2012ஆம் ஆண்டு தொடரப்பட்டது. அப்போதே நீதிமன்றம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு குறித்த விவரங்களை தனது தேர்தல் வேட்புமனுவில் பொன்முடி தெரிவித்துள்ளார். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

36 கட்சிகளின் கூட்டணி அமைத்திருக்கிறார்களே, இதில் 37ஆவது கட்சியாக அமலாக்கத் துறையையும் சேர்த்து, அவர்களை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்திலே இதுபோன்று செய்கிறார்கள்.

இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பார்த்து பாஜக எந்தளவுக்கு அச்சப்படுகிறது என்பதை இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிபடுத்துகின்றன.

பொன்முடி நன்றாக இருக்கிறார். அமலாக்கத் துறை விசாரணை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. அவர் அச்சப்படவில்லை. அடுத்தக்கட்டமாக அமலாக்கத் துறையின் நடவடிக்கையைப் பொறுத்து நீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.